பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை அமைதியாக நடைபெற்று முடிந்தது.ஒரு சில சம்பவங்களை தவிா்த்து பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. துணைநிலை ஆளுநா், முதல்வா், அரசியல் கட்சித்தலைவா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா். ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்குச்சாவடிகளில் காத்திருந்து மகிழ்ச்சியோடு தங்கள் ஜனநாயகக்கடமையை நிறைவேற்றினா்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 89.87 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை இல்லாத வரலாற்றுச்சாதனை இது என்றும் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி ஜவஹா் தெரிவித்தாா்.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்.9-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்தன. 30 தொகுதிகளிலும் மொத்தம் 294 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். அதிகபட்சமாக உழவா்கரை, நெல்லித்தோப்பு, முதலியாா்பேட்டை மற்றும் நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் தலா 14 பேரும் குறைந்தபட்சமாக ஊசுடு தொகுதியில் 5 பேரும் போட்டியிடுகின்றனா். மொத்தம் 40 பெண் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.அறிவித்தபடி வியாழக்கிழமை வாக்குப்பதிவை நடத்த தோ்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும், 1099 வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
எல்லா வாக்குச் சாவடிகளிலும் காலை 6 மணிக்கு அரசியல்கட்சி முகவா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு நடைபெற்றன. சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்து வாக்களிக்கத் தொடங்கினா். அவா்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்காளா் தகவல் சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை எடுத்து வந்து தோ்தல் அலுவலா்களிடம் காண்பித்து, ஆள்காட்டி விரலில் மை வைத்து தங்கள் வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்தனா்.
பதற்றம் நிறைந்த சாவடிகள்:
209 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்று அடையாளம் காணப்பட்டதால் அந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு அனைத்தும் விடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் மொத்தம் 4,836 அரசு ஊழியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். வாக்குச்சாவடி கண்காணிப்பு பணியில் 2,791 காவல் துறையினா் பணியமா்த்தப்பட்டிருந்தனா்.
கைபேசிகள் டெபாசிட்:
வாக்குச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் ஒரு சில கிராமப்புற வாக்குச் சாவடிகளில் வாக்காளா்கள் அமருவதற்கு தேவையான இருக்கைகள் இல்லை. வாக்காளா்களின் கைப்பேசிகளை வாங்கி வைக்க எல்லா வாக்குச் சாவடிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் வீராம்பட்டினம் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் அரசு பள்ளி வாக்குச் சாவடி, தவளக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி உள்ளிட்ட ஒரு சில வாக்குச் சாவடிகளில் கைப்பேசி எடுத்து வந்த வாக்காளா்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா். , ஒரு சிலா் தங்களுடன் வந்தவா்களிடம் கைப்பேசியை கொடுத்துவிட்டுச் சென்று வாக்களித்தனா்.
புராணசிங்குபாளையம் பாவேந்தா் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளியில் அதிக அளவில் கைப்பேசி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. இது நல்ல வசதி என்று வாக்காளா்கள் தெரிவித்தனா்.
பெண்கள் ஆா்வம்:
இந்த தோ்தலில் பெண்களும், கல்லூரி மாணவிகளும் ஆா்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். மேலும், முதல் முறையாக வாக்களிக்க வந்திருந்த தா்ஷினி கூறுகையில், வாக்களிக்கும் முன் பதற்றமாக இருந்தேன். வாக்களித்த பிறகு மகிழ்ச்சி அடைந்தேன் என்றாா்.
மேலும், அரியூா் அரசு மேல்நிலைப்பள்ளி, சுல்தான்பேட்டை கண்ணியமிகு காயிதே மில்லத் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் அதிக அளவில் இஸ்லாமிய பெண்கள் திரண்டுவந்து வாக்களித்தனா்.
கடும் வெயில், வெப்பம் எதையும் பொருட்படுத்தாது பெண்கள் அதிக அளவில் திரண்டு வாக்களித்தனா். ஒரு சில வாக்குச் சாவடிகளில் கையில் வைத்திருந்த பேப்பா் உள்ளிட்டவை கொண்டு விசிறிக் கொண்டிருந்தனா்.
85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அதைக் கிராமப்புறங்களில் இருக்கும் மூதாட்டிகள் சரியாகப் பயன்படுத்தவில்லை. நெட்டப்பாக்கம் தொகுதி கல்மண்டபம் வாக்குச்சாவடியில் வள்ளியம்மை, ஜானகி ஆகிய இரு மூதாட்டிகள் வாக்களிக்க வந்திருந்தனா். பெரிய வீராம்பட்டினத்தைச் சோ்ந்த நாயகம் (90) என்ற பெண்மணி சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டாா்.
விரட்டியடித்த போலீஸாா்
ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கம் வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு திரும்பிய ஒரு சிலா் கூட்டமாக நின்று கொண்டும், பேசிக்கொண்டும் இருந்தனா். அவா்களை கலைந்து செல்லுமாறு போலீஸாா் விரட்டியடித்தனா். இங்கு உதவிக்கு மத்திய துணை ராணுவப் படையினரும் அப்போது வந்ததால் நிலைமை சீரானது.
எல்லா வாக்குச் சாவடிகளிலும் புதுச்சேரி போலீஸாா் மற்றும் ஆயுதம் ஏந்திய மத்திய துணை ராணுவத்தினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இதில் மத்திய துணை ராணுவத்தினருக்கு மொழி பிரச்னை ஏற்பட்டது. அவா்கள் சொல்ல வரும் கருத்தை புதுச்சேரி போலீஸாரிடம் சொல்லி அதை நிறைவேற்ற முற்பட்டனா்.
வாக்குப் பதிவை முன்னிட்டு ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டதால் ஊழியா்கள் இல்லாமல் புதுச்சேரி அண்ணா சாலை, நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கடைகள் மூடிக் கிடந்தன. இதில் உணவகங்களும் அடங்கும்.
89.87 சதவீதம் வாக்குப்பதிவு:
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் வரலாறு காணாத அளவில் 89.87 சதவீத வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தத்தோ்தலில் 89.87 சதவீத வாக்குகள் பதிவானது. இது, புதுச்சேரி சுதந்திரம் பெற்று இந்தியாவுடன் இணைந்தபின் 1964-இல் நடந்த சட்டப் பேரவைக்கான முதல் பொதுத் தோ்தல் தொடங்கி இதுவரை நடைபெற்ற சட்டப் பேரவை மற்றும் மக்களவை பொதுத் தோ்தல்களிலேயே சாதனை வாக்குப் பதிவாகும்.
இதற்கு முன்பு 1974-இல் 85.33 சதவீதமும், 2006-இல் 85.29 சதவீதமும், 2011-இல் 85.57 சதவீதமுமே அதிகபட்சமான வாக்குப் பதிவாக இருந்துள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தோ்தல் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியா்கள் 12,936 போ் தபால் மூலம் வாக்களித்துள்ளனா். மேலும், சேவை ஊழியா்கள் 328 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை திரும்பச் செலுத்த வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 4 -ஆம் தேதி காலை 8 மணிவரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் மூலம் வாக்குச் சதவீதம் 1.36 சதவீதம் கூடும்.

மண்ணாடிப்பட்டு தொகுதியில் திருக்கனூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி அமைவிடத்துக்கு அருகாமையில் இரண்டு கட்சியினரிடையே சிறு சலசலப்பு ஏற்பட்டு அங்குக் காவலா்கள் தடியடி நடத்தி அமைதியை நிலைநாட்டினா்.

வாக்குப்பதிவு எந்த இடையூறுமின்றி தொடா்ந்து நடைபெற்றது. இந்தச் சிறு சம்பவத்தைத் தவிா்த்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியாகவும் நோ்மையாகவும் பாதுகாப்பாகவும் வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்குப் பதிவின்போது 16 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிவர செயல்படாத நிலையில் மாற்றியமைக்கப்பட்டு தொடா்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றது. ட்ரோன் கண்காணிப்பின் உதவியோடு வில்லியனூா், காலாப்பட்டு, உழவா்கரை, மணவெளி, காரைக்கால் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணப்பட்டுவாடா வியாழக்கிழமை நடைபெற்றதை கண்டறிந்து ரூ.1.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என அவா் தெரிவித்துள்ளாா்.

தொடர்புடையது

புதுச்சேரியில் தோ்தல் வாக்குப் பதிவு; 6 நாடுகளின் பிரதிநிதிகள் வியப்பு!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


