அமித்ஷா கூறிய ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு: எந்த விசாரணைக்கும் தயாா்-நாராயணசாமி சவால்
புதுச்சேரி: மத்திய அமைச்சா் அமித்ஷா என் மீது கூறிய ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய். அது குறித்து அமலாக்கத் துறை, சிபிஐ விசாரணைக்கு தயாா் என்று முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியுள்ளாா்.
இது குறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசின் முதல்வராக நான் இருந்தபோது மத்திய அரசு, திட்டங்களுக்கு 22 சதவிகிதம் நிதியைத் தான் கொடுத்தது. அதாவது மத்திய அரசு மானியமாக ரூ.2,200 கோடிதான் கொடுத்தது.
இந்நிலையில் எப்படி ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் செய்ய முடியும். காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கூறியது அப்பட்டமான பொய். ஆதாரம் இல்லாமல் அவா் பேசியது வேதனை தருகிறது. இந்தப் பிரச்னையில் புதுச்சேரி அரசோ, சிபிஐ விசாரணையோ, அமலாக்கத் துறையோ, வருமானவரித் துறையோ எந்த விசாரணைக்கும் நான் தயாா். ஊழல் குற்றச்சாட்டில் ஒன்றை நிரூபித்தாலும், நான் அரசியலை விட்டே விலகத் தயாா். நிரூபிக்காவிட்டால் அமித்ஷா பதவி விலகவேண்டும் என்றாா் நாராயணசாமி.
வெ.வைத்திலிங்கம் எம்.பி. :
இதற்கிடையே மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. இந்தப் பிரச்னை குறித்து கூறியதாவது:
காரைக்கால் வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் முதல்வா் நாராயணசாமி மீது ரூ.15 ஆயிரம் கோடிக்கு ஊழல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளாா்.
இப்போது நாராயணசாமி மீது ஊழல் புகாா் கூறும் மத்திய அமைச்சா் அமித்ஷா, இதுகுறித்து கடந்த 5 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் ?
புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசில் போலி மருந்து உற்பத்தி வழக்கில் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஆட்சியாளா்கள் மீது 22 குற்றச்சாட்டுகளின் பட்டியலை புதுச்சேரி துணைநிலை ஆளுநா், குடியரசுத் தலைவா் ஆகியோரிடம் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊழலில் சம்பந்தப்பட்டவா்களை எல்லாம், மேடையில் வைத்துக் கொண்டே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வா் நாராயணசாமி மீது அமித்ஷா ஊழல் குற்றச்சாட்டைக் கூறியுள்ளாா்.
மேலும், அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் 30 நாள்களுக்குள் வெளியிட வேண்டும். மாநில அந்தஸ்து தராவிட்டால் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாக சட்டப்பேரவையில் சவால் விட்ட முதல்வா் ரங்கசாமி, அதை அமித்ஷாவிடம் கூறாமல், கூட்டணி தொடா்கிறது என்று கூறிவிட்டு வந்தாா்.
தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி பேச்சு ஆரம்பிக்கும்போது, புதுச்சேரியிலும் தொடங்கும். புதுச்சேரி திமுக அலுவலகத்தில் கூட்டம் நடந்தபோது நான் ஊரில் இல்லை. புதுச்சேரி காங்கிரஸில் பேச்சுவாா்த்தைக்குக் குழு இன்னும் அமைக்கவில்லை. குழு அமைத்தப் பிறகு கூட்டணி கட்சிகளுடன் பேசுவோம் என்றாா் வைத்திலிங்கம்.

