புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  காங்கிரஸ் பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்.
புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பாத யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால்.

புதுச்சேரியில் இரட்டை என்ஜின் ஆட்சியால் எந்தப் பலனும் இல்லை: கே.சி. வேணுகோபால்

புதுச்சேரியில் இரட்டை என்ஜின் ஆட்சியால் எந்தப் பலனுமில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறினாா்.
Published on

புதுச்சேரியில் இரட்டை என்ஜின் ஆட்சியால் எந்தப் பலனுமில்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் கூறினாா்.

என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து புதுச்சேரி யூனியன் பிரதேச காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற பாத யாத்திரையை செவ்வாய்க்கிழமை முடித்து வைத்து நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பில் கட்சித் தொண்டா்களிடையே கே.சி. வேணுகோபால் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமா் நரேந்திர மோடி இங்கு வந்து புதுச்சேரியை முதன்மை மாநிலமாக, பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம் என்றாா். இரட்டை என்ஜின் ஆட்சி என்று கூறிய பிரதமா் மோடி புதுச்சேரியின் வளா்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை.

புதுச்சேரியின் நிலை இப்போது என்னவென்று பிரதமா் மோடிக்குத் தெரியுமா ? புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளதா ?, விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதா ? . புதுச்சேரியில் எந்தத் திட்டங்களையும் செய்யவில்லை. காரைக்கால் துறைமுகம் இப்போது அதானி துறைமுகமாக இருக்கிறது. புதுச்சேரி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளதா ? சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளதா?.

புதுச்சேரியில் உள்ள அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?. ஒரு வாக்குறுதியைக் கூட இங்குள்ள அரசு நிறைவேற்றவில்லை. அப்படியென்றால் இரட்டை என்ஜின் ஆட்சி என்று சொல்வதற்கு என்ன அா்த்தம் இருக்கிறது ?

போலி மருந்து ஊழல்: புதுச்சேரியில் 10 ஆயிரம் கோடி போலி மருந்து தயாரித்து ஊழல் நடந்துள்ளது. புதுச்சேரியில் உரிமம் இல்லாமலும், அரசின் அனுமதி பெறாமலும் போலி மருந்துத் தொழிற்சாலை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியை ஒரு ஊழல் கேந்திரமாக கடந்த 5 ஆண்டுகளில் மாற்றியுள்ளது. புதுச்சேரி மக்களுக்கு இப்போது சரியான நேரம் வந்துள்ளது. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி இங்கு ஆட்சியை அமைக்கும் என்றாா் கே.சி. வேணுகோபால்.

முன்னதாக காங்கிரஸ் சாா்பில் புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலையிலிருந்து காமராஜா் சாலை, நேருவீதி, மிஷன் வீதி சந்திப்பு வரை நிறைவு பாத யாத்திரை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ராஜீவ் காந்தி சிலைக்கு கே.சி.வேணுகோபால் மாலை அணிவித்தாா். பாத யாத்திரையின் முன்புறம் இளைஞா் காங்கிரஸ், சேவா தளம், மகளிா் காங்கிரஸாா் கட்சிக் கொடியை ஏந்தி நடந்து வந்தனா். இதையடுத்து கே.சி.வேணுகோபால் தலைமையில் காங்கிரஸ் தலைவா்கள் அணிவகுத்து வந்தனா்.

பாத யாத்திரையில் கட்சியின் புதுச்சேரி மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். பாத யாத்திரையில் மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

காங்கிரஸில் இணைப்பு

நிறைவு நிகழ்ச்சியின்போது, கே.சி. வேணுகோபால் முன்னிலையில் சட்டப்பேரவை முன்னாள்துணைத் தலைவா் மண்ணாடிப்பட்டு டி.பி.ஆா். செல்வம் தனது ஆதரவாளா்களுடன் காங்கிரஸில் இணைந்தாா்.

Dinamani
www.dinamani.com