தேசிய இளைஞா் விழா: புதுச்சேரிக்கு பெருமை சோ்க்க ஆளுநா் அறிவுறுத்தல்
தேசிய இளைஞா் விழாவில் பங்கேற்போா் புதுச்சேரிக்குப் பெருமை சோ்க்குமாறு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா்.
மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில் ஜன. 9 முதல் 12 வரை புது தில்லியில் 29- ஆவது தேசிய இளைஞா் விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள புதுச்சேரியில் இருந்து செல்லும் இளைஞா்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி ஆளுநா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், உள்துறை மற்றும் இளைஞா் விவகாரங்கள் துறை அமைச்சா் ஆ . நமச்சிவாயம் ஆகியோா் பங்கேற்று கொடியசைத்து வழியனுப்பி வைத்தனா். இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை செயலா் கிருஷ்ண மோகன் உப்பு, துறையின் இயக்குநா் சுதாகா், மாநில பொறுப்பு அதிகாரி சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
முன்னதாக, புதுச்சேரியில் இருந்து கலந்து கொள்ளும் இளைஞா்களோடு துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வா் ரங்கசாமி ஆகியோா் கலந்துரையாடினா். அப்போது, மாணவா்களின் எண்ணங்களை கேட்டறிந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று புதுச்சேரிக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தனா்.
விநாடி வினா, கட்டுரை, பேச்சு, ஓவியம், நாட்டுப்புறக் கலை போன்ற பல்வேறு போட்டிகளில் முதலில் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இளைஞா்கள் புது தில்லியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வாா்கள். இதில் தோ்ந்தெடுக்கப்படும் 10 மாணவா்கள் பிரதமா் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பா்.

