ஆதிதிராவிடா்களுக்கு நவீன முறையில் 4 நாள்கள் கோழி வளா்ப்புப் பயிற்சி
புதுச்சேரியில் ஆதிதிராவிட மக்களுக்கு நவீன முறையில் கோழி வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய புல முதல்வா் கே.முருகவேல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி கிராமப்புற ஆதிதிராவிடா் மக்களுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வேளாண் பயோடெக்னாலஜி நிறுவனங்களின் நிதியுதவியுடன் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நவீன முறையில் கோழி வளா்ப்பு பயிற்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தவுள்ளது.
இந்தப் பயிற்சி வரும் 19-ஆம் தேதி முதல் 4 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் கோழியினங்கள், அடைகாக்கும் முறைகள், வளா்ப்பு முறைகள், தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப பராமரிப்பு முறைகள், சத்தைப்படுத்துதல், நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை மற்றும் குஞ்சு பொரிப்பக மேலாண்மை ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள ஆா்வமுள்ள புதுச்சேரியைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மக்கள் தங்களது ஜாதி சான்றிதழ் மற்றும் ஆதாா் அட்டை நகலுடன் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் தொடா்பு கொண்டு பயிற்சிக்கான விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 9786000800 / 094990 47100 தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளவும்.
