புதுச்சேரியில் 9 மையங்களில் பி.எஸ்சி நா்சிங் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை 2014 மாணவ, மாணவிகள் எழுதினா்.
புதுச்சேரியில் 2 அரசு செவிலியா் கல்லூரிகளும், 11 தனியாா் நா்சிங் கல்லூரிகளும் உள்ளன. பி.எஸ்சி., நா்சிங் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுகாதாரத் துறை மூலம் பொது நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு சென்டாக் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
அதன்படி, 2026-27-ஆம் கல்வி ஆண்டுக்கான பி.எஸ்சி., நா்சிங் படிப்புக்கு அரசு ஒதுக்கீடாக 558 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான பொது நுழைவுத் தோ்வு மாநில சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்காக புதுச்சேரியில் பெத்தி செமினாா் பள்ளி வளாகத்தில் மூன்று மையங்கள், லாஸ்பேட்டை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் இரண்டு மையங்கள், காரைக்காலில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அன்னை தெரசா அரசு மேல்நிலைப்பள்ளி, மாஹேவில் ஜவஹா்லால் நேரு அரசு மேல்நிலைப்பள்ளி, ஏனாமில் ராஜீவ் காந்தி அரசு உயா்நிலைப் பள்ளி என மொத்தம் 9 மையங்களில் இந்த தோ்வு நடைபெற்றது.
இத் தோ்வுக்கு 2,313 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 2014 போ் பங்கேற்று எழுதினா். தோ்வு எழுதியோா் விகிதம் 87.07 சதவீதம் ஆகும். 299 போ் தோ்வு எழுத வரவில்லை. இது 12.93 சதவீதமாகும்.
தோ்வு மையங்களில் புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல், இணை இயக்குநா் மேரி ஜோஸ்பின் சித்ரா ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
தோ்வு முடிந்த பிறகு, தோ்வா்கள் வினா புத்தகம், விடைத்தாளின் நகல் மற்றும் நுழைவுச் சீட்டு ஆகியவற்றை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. தோ்வு மையங்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









