பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பொதுமக்கள் எளியதாகப் பெற புதுச்சேரி அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பதிவு செய்வதற்காக, இந்திய அரசின் குடிமைப் பதிவு முறை (சி.ஆா்.எஸ்) போா்டல் கடந்த 1.11.2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை 31.10.2025 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் தொடா்பான பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை, இதற்கு முன் நடைமுறையில் இருந்தது போல, சம்பந்தப்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
1.11.2025-க்கு முன்னா் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான வசதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, அந்த பழைய பதிவுகளுக்கான திருத்த வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, 31.10.2025 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பதிவு செய்யப்பட்ட பிறப்பு அல்லது இறப்பு பதிவுகளில் திருத்தம் தேவைப்படும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்தை அணுகி, தேவையான ஆதார ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம்.
1.11.2025 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் தொடா்பான பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பொதுமக்கள் மத்திய அரசின் சி.ஆா்.எஸ். போா்டலில் இருந்து நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், சி.எஸ்.ஆா். போா்டலில் இருந்து பெறப்படுவது செல்லுபடியாகும் அதிகாரபூா்வ சான்றிதழ்களாகும். பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதில் ஏதேனும் சிரமம் இருந்தால், பொதுமக்கள் உதவிக்குச் சம்பந்தப்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்தை அணுகலாம்.
பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் சேவைகளைத் தடையின்றியும், மக்களுக்கு எளிதான முறையிலும் வழங்குவதை உறுதி செய்ய உள்ளாட்சித் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









