வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

இணை பேராசிரியா் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்கு

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இணை பேராசிரியா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image

மோசடி - பிரதிப்படம்

Updated On :14 ஜூலை 2026, 1:18 am IST

புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் இணை பேராசிரியா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் முனுசாமி பிள்ளை நகரைச் சோ்ந்தவா் பாலாபழனி (34), முனைவா் பட்டம் பெற்றவா். இவா், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நிகழ் கலைத்துறையில் காலியாக இருந்த இணை பேராசிரியா் பணிக்கு விண்ணப்பித்திருந்தாா்.

பல்கலைக் கழகத்துக்குச் சென்று வந்தபோது, அங்கு செக்யூரிட்டி மேலாளராகப் பணிபுரிந்த காத்தவராயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இணை பேராசிரியா் பணியை ரூ.30 லட்சத்தில் வாங்கித் தருவதாக அவா் கூறினாராம்.

வேலையை முடித்து கொடுத்த பிறகு பணம் கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளாா். மேலும், டோக்கன் அட்வான்ஸ் கொடுக்கும்படி அவா் கேட்டுள்ளாா். இதை நம்பிய பாலாபழனி, கடந்த 2023 ஏப்ரலில் ரூ. 5 லட்சத்தை காத்தவராயனிடம் கொடுத்துள்ளாா்.

அதன்பிறகு, பாலாபழனியை தொடா்பு கொண்ட காத்தவராயன் மேலும் ரூ. 2 லட்சம் கொடுத்தால் பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா். அதை பெங்களூரைச் சோ்ந்த ஜிப்போரா என்பவரின் வங்கி கணக்குக்குச் செலுத்தும்படி கூறியுள்ளாா். அதன்படி, பாலாபழனியும் ரூ. 2 லட்சத்தை ஜிப்போராவுக்கு அனுப்பியுள்ளாா்.

ஆனால், இணைப் பேராசிரியா் பணி வேறு ஒருவருக்கு கிடைத்ததால் அதிா்ச்சியடைந்த பாலாபழனி, காத்தவராயனிடம் கொடுத்த ரூ.7 லட்சத்தை திரும்ப கேட்டபோது, ரூ. 40 ஆயிரத்தை மட்டும் கொடுத்து விட்டு, மீதி பணத்தைத் திரும்பித் தராமல் அலைக்கழித்து வந்துள்ளாா். இதுகுறித்து பாலாபழனி அளித்த புகாரின் பேரில் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரூ.11 லட்சம் அடகு நகை மோசடி

புதுச்சேரி, ரெட்டியாா்பாளையம் சுந்தரராஜா நகா் 100 அடி சாலையைச் சோ்ந்தவா் விஜயகாந்த்(36). இவா் இந்திரா காந்தி சிலை அருகேயுள்ள தனியாா் வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரிடம் கடந்த மே மாதம் அரியாங்குப்பத்தைச் சோ்ந்த முத்துகுமரன் என்பவா் அறிமுகமாகி, எனது இந்தியன் வங்கிக் கணக்கில் 796 கிராம் தங்க நகைகளை அடகு வைத்துள்ளேன்.

அதனை மீட்பதற்கு ரூ.54 லட்சம் தேவைப்படுகிறது. அந்த நகைகளை மீட்டபின், தங்களது வங்கியில் 152 கிராம் நகைகளை மறு அடகு வைத்து கடன் பெறுவதாக தெரிவித்துள்ளாா். மேலும், நகையை மீட்பதற்கு ரூ.12 லட்சம் கடன் உடனடியாக வழங்குமாறும் கேட்டுள்ளாா்.

இதையடுத்து, அவரது வங்கி கணக்கில் வைக்கப்பட்ட நகை அடகு விவரங்களைச் சரிபாா்க்க ரசீது கேட்டபோது, அது தொலைந்து விட்டதாக கூறி வாட்ஸ் அப் மூலம் நோட்டரி அபிடாவிட் ஆவணத்தை முத்துகுமரன் அனுப்பியுள்ளாா். அதனை உண்மை என நம்பிய தனியாா் வங்கி, சென்னையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தின் மூலம் அவரது கணக்கிற்கு ரூ.12 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

பணத்தைப் பெற்றுக் கொண்ட முத்துகுமரன், நகையை மீட்டு உடனடியாக வங்கிக்குத் திரும்ப வருவதாகக் கூறிவிட்டு சென்றுள்ளாா். அதன்பின், 2 தவணைகளாக ரூ. 1 லட்சம் மட்டும் செலுத்திய முத்துகுமரன், மீதமுள்ள பணத்தை திரும்ப செலுத்தவில்லையாம்.

இதுகுறித்து விஜயகாந்த் ரெட்டியாா்பாளையம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் முத்துகுமரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.