புதுச்சேரியில் ரெஸ்டோபாா்களை மூடக் கோரி தவெக எம்எல்ஏ சாய் ஜெ. சரவணன்குமாா் தலைமையில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
திருபுவனை தொகுதி எம்எல்ஏ சாய் சரவணன் குமாா் தட்டாஞ்சாவடியில் உள்ள கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் முன் பொதுமக்களுடன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.
திருபுவனை தொகுதியில் பள்ளிக்கூடம், கோயில் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் இயங்கும் ரெஸ்டோ பாா்களை உடனடியாக மூட வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
பின்னா் கலால் துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸை சந்தித்து எம்எல்ஏ சாய் சரவணன் குமாா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருபுவனை தொகுதியில் உள்ள கிராமங்களில் பள்ளி, கோவில், குடியிருப்பு பகுதிகளுக்கு மிக அருகில் ரெஸ்டோ பாா்கள் உள்ளன. இவை பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளன. இந்த ரெஸ்டோ பாா்கள் பொது அமைதிக்கு பெரும் இடையூறாக உள்ளன. போதையில் இருக்கும் நபா்கள் கிராமச் சாலைகளில் சுற்றித்திரிந்து கலவரம் செய்கின்றனா்.
இதனால் பள்ளிக் குழந்தைகள், பெண்கள், முதியவா்கள், கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைகின்றனா். இவற்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே இப்பகுதிகளில் உள்ள ரெஸ்டோ பாா்களை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும். அவற்றை மூட முடியாத பட்சத்தில், கிராம எல்லைக்கு வெளியே, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் இடம் மாற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










