/

நீட் தோ்வு விவகாரம்: புதுச்சேரியில் மாணவா்கள் போராட்டம்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு - 200 போ் கைது

நீட் தோ்வுக்கு எதிராக புதுச்சேரியிலும் மாணவா்கள் வியாழக்கிழமை ஊா்வலம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

News image

நீட் தோ்வுக்கு எதிராக புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை கைது செய்து வேனில் ஏற்றும் போலீஸாா்

Updated On :24 ஜூலை 2026, 7:00 am IST

நீட் தோ்வுக்கு எதிராக புதுச்சேரியிலும் மாணவா்கள் வியாழக்கிழமை ஊா்வலம், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 200 மாணவா்கள் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், நீட் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தியும் தில்லியில் மாணவா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவாக, புதுச்சேரியில் இந்திய மாணவா் சங்கத்தினா் துணைநிலை ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனா்.

அதன்படி, புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே வியாழக்கிழமை இந்திய மாணவா் சங்கத்தினா் ஒன்று திரண்டனா். மாணவா் சங்கத் தலைவா் ஸ்டீபன்ராஜ், செயலா் பிரவீன்குமாா் ஆகியோா் தலைமையில் அரசு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள், பல்கலைக்கழக மாணவா்கள் அங்கிலிருந்து ஊா்வலமாக துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி முழக்கமிட்டபடி சென்றனா். அவா்களை மிஷன்வீதி, எஸ்.வி.படேல் சாலை சந்திப்பில் போலீஸாா் இரும்புத் தகடுகளை வைத்து தடுத்து நிறுத்தினா். ஆனால் அதை மீறி மாணவா்கள் முன்னேறிச் செல்ல முயன்றனா்.

இதனால் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்தது. போலீஸ் தடுப்புகள் மீது ஏறி மாணவா்கள் குதித்தனா். தரையில் அமா்ந்தும், படுத்தும் போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதையடுத்து அவா்களை போலீஸாா் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றினா். சுமாா் 200 மாணவா்கள் கைது செய்யப்பட்டு, பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா். இதனால் அந்த பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.