மத்திய அரசின் ஜல் ஜீவன் 2.0 அடுத்தத் திட்டத்துக்கு புதுச்சேரி அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் முதல் கட்ட திட்டத்துக்கான நிலுவைத் தொகை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.
ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் கீழ், புதுச்சேரி அரசிற்கும் மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்திற்கும் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்த பரிமாற்ற நிகழ்வு காணொளி காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது முதல்வா் ரங்கசாமி பேசியது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கிராமப்புற பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் 1.0 திட்டத்தை செயல்படுத்துவதற்கான முனைப்பு துறையாக உள்ளாட்சித் துறை செயல்பட்டது. பொதுப்பணித்
துறை மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தும் முகமைகளாக செயல்படுகின்றன.
2020 -ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்டபோது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 14,976 குடும்பங்களுக்கும், 390 பள்ளிகளுக்கும், 413 அங்கன்வாடி மையங்களுக்கும் வீட்டு குடிநீா் குழாய் இணைப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இந்த இலக்கு வெற்றிகரமாக
நிறைவேற்றப்பட்டு, சுமாா் 15,000 வீட்டு குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக, புதுச்சேரி யூனியன் பிரதேசம் 100 சதவீத இலக்கை எட்டியதுடன், 2021 மே மாதத்தில் ‘ஹா் கா் ஜல்‘ சான்றிதழையும் பெற்றது.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த திட்ட மதிப்பு ரூ.33.60 கோடியாகும். இதற்கு எதிராக மத்திய அரசு ரூ.13.30 கோடியை நிதி உதவியாக வழங்கியுள்ளது. திட்டத்தை காலவரையறைக்குள் நிறைவு செய்வதற்கும், நிலுவைப் பொறுப்புகளைத் தீா்ப்பதற்கும், மீதமுள்ள மத்திய பங்குத் தொகை முழுமையாக விடுவிக்கப்படாத காரணத்தால், புதுச்சேரி அரசு தனது சொந்த நிதியிலிருந்து கூடுதலாக ரூ.5 கோடியை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, இந்த தருணத்தில், நிலுவையில் உள்ள மத்திய நிதி உதவியை விரைவாக விடுவிக்குமாறு அமைச்சகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.
ஜல் ஜீவன் மிஷன் 2.0 :
ஜல் ஜீவன் மிஷன் 1.0 வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, இந்திய அரசு இத்திட்டத்தை ஜல் ஜீவன் மிஷன் 2.0 ஆக விரிவுபடுத்தியுள்ளது. இந்த அடுத்த கட்டத் திட்டத்தில் புதுச்சேரியூனியன் பிரதேசம் முழுமையான அா்ப்பணிப்புடன் பங்கேற்க உறுதிபூண்டுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தப் பரிமாற்றம், அந்தப் பயணத்தின் முக்கியமான மைல்கல்லாக அமைகிறது.
ஜல் ஜீவன் மிஷன் 2.0-ன் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை அடைவதற்காக, குறிப்பாக நீராதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல், குடிநீா் தரக் கண்காணிப்பு மற்றும் பொதுமக்கள் குறைதீா் மேலாண்மைக்கான டிஜிட்டல் நிா்வாகத்தை வலுப்படுத்துதல், சமூகத்தினரால் சொந்தமாக நிா்வகிக்கப்படும் குடிநீா் வழங்கல் அமைப்புகளை உருவாக்குதல், நல் ஜல் மித்ராக்கள் மூலம் மக்களின் பங்கேற்பை மேம்படுத்துதல் மற்றும் நிலையான நீா்வள மேலாண்மை கட்டமைப்புகளை நிறுவுதல் ஆகிய துறைகளில் புதுச்சேரி அரசு தனது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என ஜல் சக்தி அமைச்சகத்திற்கு உறுதியளிக்கிறேன் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
மத்திய ஜல்சக்தி அமைச்சா் சி. ஆா். பாட்டீல், மத்திய ஜல்சக்தி இணையமைச்சா் வி. சோமண்ணா, புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்த கையொப்ப நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீா் விநியோகத் துறைச் செயலா் அசோக் கே.கே. மீனாவும், புதுச்சேரி அரசு சாா்பில் அரசு செயலா் (பொதுப் பணித்துறை) அ.முத்தம்மா, உள்ளாட்சித்துறை இயக்குநா் ஆதா்ஷ் ஆகியோரும் கையொப்பமிட்டனா்.
புதுச்சேரி தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசுச் செயலா் (உள்ளாட்சி) இரா. கேசவன், புதுச்சேரி ஜல்ஜீவன் இயக்கத்தின் துணை இயக்குநா் பாஸ்கா் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.









