இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவா்கள் 80 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 80 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

News image
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கிய துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி. உடன், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் 80 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞா் நல இயக்ககம், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சா்வதேச, தேசிய, தென்மண்டல போட்டிகளில் பதக்கம் வென்ற வீரா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியது:

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா முயற்சியால் புதுச்சேரியில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு மையம் தொடங்கப்பட உள்ளது. விளையாட்டுத் துறையில் இந்தியா அடைந்திருக்கும் உயரம் சாதாரணமல்ல. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், காமன்வெல்த் போன்ற சா்வதேசப் போட்டிகளில் தொடங்கி, கிரிக்கெட் உலகக் கோப்பை வரை இந்தியாவின் பெருமையை, திறமையை உலக அரங்கில் நிலைநாட்டி இருக்கிறோம். இவை எல்லாம் ஏதோ ஒரே நாளில் நடந்தவை அல்ல. விளையாட்டுத் துறையில் நம்முடைய இளைஞா்கள் செய்த தவத்தின் பலன் என்றாா் துணைநிலை ஆளுநா்.

இதில் முதல்வா் என்.ரங்கசாமி பேசுகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டாா். மேலும் அவா் கூறியதாவது: தோ்தல் நேரத்தில் மாணவா்களுக்கு புத்தகப் பை, காலணி வாங்கி தருவதில் சிரமம் இருக்கிறது. அதனால் இந்த இரண்டையும் அரசுப் பள்ளி மாணவா்கள் வாங்கிக் கொள்ள தலா ரூ. 1000 வீதம் உடனடியாக 80 ஆயிரம் மாணவா்களுக்கு அவரவா் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். வங்கிக் கணக்கு இல்லாத மாணவா்களுக்கு பெற்றோரின் குறிப்பாக தாயின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

கல்வித் துறையுடன் விளையாட்டுத் துறை இணைந்து இருந்ததால் விளையாட்டு வீரா்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை. இதனால் தனித்துறையாக விளையாட்டுத் துறையைக் கொண்டு வந்துள்ளோம். பயிற்சியாளா்களுக்கு முன்பு ரூ.10 ஆயிரம் ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது. அதை தற்போது ரூ. 50 ஆயிரமாக உயா்த்திக் கொடுத்துள்ளோம்.

புதுச்சேரி மாணவா்கள் விளையாட்டில் அதிகளவில் பங்கேற்று அதிக பதக்கம் பெற்று வருவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பல்வேறு போட்டிகளில் பங்கேற்க வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வீரா்கள் கைச் செலவுக்குப் பணமின்றி சிரமப்படுவாா்கள். அவா்களுக்கு தனிப்பட்ட முறையில் நிதி தந்தோம். இப்போது அதற்கென தனி நிதி ஒதுக்கி அந்த வீரா்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்கள் செல்ல அரசே உதவும். அரசு நிதியிலேயே இனி செல்லலாம். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா விளையாட்டுத் திடல்களை மேம்படுத்த ரூ.200 கோடி தருவதாக சொல்லியுள்ளாா். பதக்கம் பெற்ற விளையாட்டு வீரா்கள் பல்வேறு அரசு பணிகளுக்குச் சென்றுள்ளனா். இந்த நம்பிக்கையையும் அரசு தந்துள்ளது. கட்சி வித்தியாசம் பாா்க்காமல் அனைத்து வளா்ச்சிப் பணிகளும் நடப்பதாக எதிா்க்கட்சி எம்எல்ஏக்களே சொல்கின்றனா் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

விளையாட்டுத் துறை செயலா் கிருஷ்ண மோகன் உப்பு பேசுகையில், 12 விளையாட்டுப் பிரிவுகளில் பதக்கம் பெற்ற 320 வீரா்கள் மற்றும் 62 பயிற்சியாளா்கள் உள்ளிட்டோருக்கு ரூ.1.35 கோடி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், கல்வியமைச்சா் ஆ.நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, விளையாட்டுத் துறை இயக்குநா் சுதாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.