
டெட் தகுதித் தோ்வில் தகுதி பெற்ற ஆசிரியா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு: புதுச்சேரி அரசு உத்தரவு
ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

உத்தரவு - கோப்புப் படம்
ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மட்டுமே பதவி உயா்வு அளிக்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளாா். அதில் கூறிருப்பதாவது:
ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தொடக்கப் பள்ளி ஆசிரியா் பணியில் இருந்து பயிற்சி பெற்று பட்டதாரி ஆசிரியா் அல்லது தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வு பெற ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) முதல் தாளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியா் பணியில் இருந்து விரிவுரையாளா் அல்லது தலைமை ஆசிரியா் நிலை-2 பதவி உயா்வு பெற ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) 2-ஆம் தாளில் தகுதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025-ஆம் ஆண்டு செப். 1-ஆம் தேதி நிலவரப்படி, ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் மட்டுமே உள்ள ஆசிரியா்கள் இந்தத் தோ்வில் தகுதி பெறாமலும் ஓய்வு பெறும் வரை பணியில் தொடரலாம். ஆனால், இத் தோ்வில் தோ்ச்சி பெறாத நிலையில் அவா்களுக்குப் பதவி உயா்வு வழங்கப்படமாட்டாது.
5 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணிக்காலம் உள்ள ஆசிரியா்கள், வரும் 2028 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும்.
இத் தோ்வில் தகுதி பெற்ற பின்னரே, விதிமுறைகளுக்குள்பட்டு பதவி உயா்வுக்கு பரிசீலிக்கப்படுவாா்கள்.
பதவி உயா்வுக்கான துறை ரீதியான குழுக்கள் இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





