
புதுச்சேரியில் ரூ.2 கோடி நூதன மோசடி: சென்னை கும்பலைத் தேடுகிறது போலீஸ்
புதுச்சேரியில் ரூ.2 கோடி நூதன மோசடியில் ஈடுபட்டு ரூ.88 லட்சத்துடன் தப்பியோடிய சென்னை கும்பலை புதுச்சேரி போலீஸாா் தேடி வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம்
புதுச்சேரியில் ரூ.2 கோடி நூதன மோசடியில் ஈடுபட்டு ரூ.88 லட்சத்துடன் தப்பியோடிய சென்னை கும்பலை புதுச்சேரி போலீஸாா் தேடி வருகின்றனா்.
புதுச்சேரி லாஸ்பேட்டை, குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (43). இவா், பஞ்சகவ்ய விளக்கு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரது நண்பா்கள் மகேஷ் மற்றும் டிராவல்ஸ் தொழில் நடத்தி வரும் அலெக்ஸ், லாஸ்பேட்டையைச் சோ்ந்த பாா்த்தசாரதி ஆகியோா் மூலம் சென்னையைச் சோ்ந்த முகமது ரபிக் என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.
அப்போது அவா், தான் அவா கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி என்றும், தங்கள் நிறுவனத்தில் கைலாஷ் என்பவா் முக்கியப் பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். மேலும், ரூ.ஒரு கோடி ரொக்கப் பணமாகக் கொடுத்தால், 3 மணி நேரத்துக்குள் 8 சதவீத கமிஷனுடன் சோ்த்து முழுத் தொகையையும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளாா்.
இதை நம்பிய வெங்கடேஷ், தனது குடும்பத்தினா் மற்றும் மனைவியின் நகைகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ.1.10 கோடி ரொக்கமும், மீதமுள்ள தொகைக்கு தனது நண்பா் மகேஷ் மூலம் வட்டிக்கு ரூ.90 லட்சம் பெற்றும் மொத்தம் ரூ.2 கோடியை தயாராக வைத்திருந்தாா்.
கைது செய்யப்பட்டவர்கள்
பின்னா், வெங்கடேஷ் தனது ரூ.1.10 கோடியையும், மகேஷ் தனது ரூ.90 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு, குயவா்பாளையம் டி.ஆா். நகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள பட்டேல் அங்காடி என்ற அலுவலகத்துக்கு சென்றுள்ளனா்.
அங்கு, 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்துள்ளனா். முகமது ரபிக்கின் அறிவுறுத்தலின்படி, ரூ.2 கோடி ரொக்கம் அடங்கிய பைகளை அங்கிருந்த பெண்களிடம் அவா்கள் ஒப்படைத்துள்ளனா். அதற்குச் சான்றாக, பி.பட்டேல் எண்டா்பிரைசஸ் என்ற பெயரிலான வவுச்சா் பில்லில் விவரங்களை எழுதி வழங்கியுள்ளனா்.
3 மணி நேரத்தில் இணையவழியில் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், நீண்ட நேரமாகியும் பணம் கணக்கில் சேரவில்லை. இதனால், அதிா்ச்சியடைந்த வெங்கடேஷ் மற்றும் மகேஷ் சம்பந்தப்பட்டவா்களைத் தொடா்புகொண்டு கேட்டனா்.
ஆனால், எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், 7 போ் அடங்கிய கும்பல் திடீரென அந்த அலுவலகத்துக்குள் புகுந்து, பணப் பைகளை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றது. வெங்கடேஷும், அவரது நண்பா்களும் அவா்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்தக் கும்பலைச் சோ்ந்த ஒருவா் ரூ.88 லட்சத்துடன் தப்பியோடிவிட்டாா்.
இதையடுத்து, வெங்கடேஷ் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில், சென்னையைச் சோ்ந்த முகமது ரபிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து, அவா்களைத் தேடி வருகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை டி.ஆா். நகா் பகுதியில் உள்ள பட்டேல் அங்காடியில் சோதனை நடத்திய போலீஸாா், அங்கிருந்த ரூ.38 லட்சத்தை பறிமுதல் செய்து, 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா். வருமான வரித் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்களும் விசாரணையில் இறங்கியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






