சமுதாயப் பணியில் கால்நடை மருத்துவ மாணவர்கள்
கால்நடை மருத்துவப் பயிற்சி மாணவர்கள் ஷேடோ வெட் என்ற புதிய அமைப்பைத் தொடங்கி மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சமுதாயப் பணிகளை மேற்கொண்டு சாதனை புரிந்து வருகின்றன


கால்நடை மருத்துவப் பயிற்சி மாணவர்கள் ஷேடோ வெட் என்ற புதிய அமைப்பைத் தொடங்கி மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சமுதாயப் பணிகளை மேற்கொண்டு சாதனை புரிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் பல்கலைக் கழகத்தின் கீழ் சென்னை வேப்பேரி, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதன் மூலம் 1,200 மாணவ, மாணவிகள் வரை 5 ஆண்டு பட்டப் படிப்பாக கால்நடை மருத்துவம் படித்து வருகின்றனர்.
இந்த மாணவர்களுக்கு 5 ஆண்டு பயிற்சி நிறைவாக, இறுதியாண்டு மாணவர்கள் 6 மாத காலம் இன்டெர்ன்ஷிப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது அவர்கள், வெளி மாவட்டங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, களப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இறுதியாண்டு மாணவர்கள் பட்டப்படிப்போடு நின்றுவிடாமல் சமுதாயப் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
"ஷேடோ வெட்ஸ்' அமைப்பு மூலம் தொடரும் பணி: அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்கள்தான் மரக்கன்றுகளை நடும் சமுதாயப் பணியை தொடங்கியுள்ளனர்.
இந்தப் பணி ஆண்டுதோறும் தொடர வேண்டும் என்பதற்காக உயரிய சமுதாய சிந்தனையில் அந்த அமைப்பு மூலம் மரக்கன்றுகளை நட்டும், அதனை பராமரிக்க அப்பகுதி சமூக ஆர்வலர்கள், மாணவர்களை நியமித்து, அதற்கான பராமரிப்புத் தொகையும் வழங்கி வருவது வியக்கத் தக்கதாக உள்ளது.
பொலிவுபெறும் கால்நடை மருத்துவமனைகள்: இந்தாண்டு படிப்பு முடித்து, மாநிலம் முழுவதும் களப் பயிற்சிக்காக வந்துள்ள இறுதியாண்டு மாணவர்கள்,
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் முகாமிட்டு, அங்கு புதர், மரங்கள் சூழந்த கால்நடைத்துறை மருந்தக வளாகங்களை தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இதற்காக மாணவர்களுக்கு அங்குள்ள கால்நடை மருத்துவர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
இயற்கை கட்டமைப்பை பாதுகாக்க ஷேடோ வெட்ஸ் : இந்தப் பணிகளை மேற்கொண்டு வரும் கால்நடைத் துறை பயிற்சி மாணவரும், இந்த அமைப்பின் தலைவருமான தாமோதரச்செல்வம், செயலர் பிரசாந்த், சக பயிற்சி மாணவர்களான நிர்மல்குமார், மோகனப்பிரியா ஆகியோர் கூறியது:
கால்நடை மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில் 6-மாத களப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக, இறுதியாண்டு மாணவர்களும் ஒவ்வொரு மாவட்டங்களுக்காக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாங்கள் 2012-13-ஆம் ஆண்டில் சேர்ந்த, தற்போது இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பயிற்சியோடு, பயன்தரும் மரக்கன்றுகளை நடவும், சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக பராமரிக்கவும் வேண்டும் என்ற ஆர்வம் எங்களிடையே ஒருமித்திருந்தது. இதனால், நாங்கள் களப் பயிற்சிக்கு தொடங்கியபோதே கடந்த ஏப்ரல் மாதம் ஒரு அமைப்பை ஏற்படுத்தினோம்.
ஷேடோ வெட்ஸ் (நஏஅஈஞர யஉபந) என்பதே அதன் பெயராகும். அதற்கான தலைவரும், செயலர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்து, இறுதியாண்டில் பயிற்சியில் உள்ள 256 பேரும் அதில் உறுப்பினர்களாக இணைந்து சமுதாயப் பணியைத் தொடங்கியுள்ளோம். நாமக்கல் மதியழகன், திருநெல்வேலி ராபின், ஒரத்தநாடு பிரவீன் போன்றோரும் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
சமுதாயப் பணிக்காக கல்வி உதவித்தொகை தியாகம்: இந்த இயக்கத்தின் நோக்கம், எண்ணிலடங்காத வகையில், தொடர்ந்து, மரக்கன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாப்பதாகும். நாங்கள் பயிற்சிக்குச் செல்லும் கால்நடை மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தி மரக்கன்றுகளை நடுவது, அதன் மூலம் அப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களை அழைத்து, அவர்களுக்கும் பயன்தரும் புங்கன், வேம்பு, சொர்க்கம் போன்ற மரக்கன்றுகளை வழங்குவதோடு, அவர்கள் மூலம், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கச் செய்தலையும், இதற்காக எங்களுக்கு வரும் கல்வி உதவித் தொகையை வசூலித்து செலவிட்டு வருகிறோம். எங்களுக்கு 3 மாதங்கள் கிராமப்புற பயிற்சியும், 3 மாதங்கள் பண்ணைகளிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது அனைத்து மாணவர்களும் கிராமப்புற களப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு குழுவினரும், இதர மாவட்டங்களில் ஆங்காங்கே எங்களது மாணவர் குழுவினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, மரக்கன்றுகளை நடவு செய்வது, பராமரிப்பது போன்றவைக்காக, கால்நடைத் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட அதிகாரிகளை சந்தித்து அனுமதியும் பெற்றுள்ளோம். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கால்நடை மருத்துவமனையில், புதர்கள், செடிகளுடன் காடு போல இருந்த பகுதியை முதலில் சீர்படுத்தினோம். பிறகு வளாகத்தில் 50 மரக்கன்றுகளை நடவு செய்தோம்.
நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை, தொடர்ந்து பராமரிக்க இங்குள்ள சிறார்களை தன்னார்வலர்களாக நியமித்து, அவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கவும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கடுத்து, திருவெண்ணெய்நல்லூர் கால்நடை மருத்துவமனையில், புதர்களாக இருந்த இடத்தை சுத்தம் செய்துள்ளோம். அங்கேயும் 100 மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம்.
தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் 1500 மரக்கன்றுகள் வரை நடப்பட்டுள்ளன. மரக்கன்று நடுவதோடு, அன்றைய தினம் பொது மக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்குகிறோம். ஆடு, மாடுகள் தொடாத வகையில் வேலியும் அமைக்கிறோம். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கள்ளக்குறிச்சி, விக்கிரவாண்டி பகுதியிலும் நடவு செய்யப்பட உள்ளது.
இதேபோல, கோயம்புத்தூர், மேச்சேரி, சேலம், திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், எங்களது மாணவர் குழுவினர், தூய்மைப் பணியோடு, மரக்கன்றுகளையும் நட்டு வருகின்றனர். வரும் நவம்பர் வரை இப்பணிகள் தொடரும்.
மாணவர் ஒருவருக்கு 2 மரக் கன்றுகள் என்ற இலக்கை நிர்ணயித்து தற்போது, 500 கன்றுகளை நட்டுள்ளனர். அடுத்தது இது 1,000 மாக உயரும்.
கால்நடை பராமரிப்பு பணியும்: விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் ஆனந்த், கால்நடை இணை இயக்குநர் மாதேஷ்வரன், குருவாய்யா ஆகியோரும், கால்நடை மருத்துவர்களும் எங்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்தப் பணிகளுக்கிடையே விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாமும், வறட்சிக்கேற்ற மாற்றுத் தீவனம் போன்ற ஆலோசனையும் மருத்துவர்கள் துணையுடன் வழங்கி வருகிறோம் என்றனர்.
ஆண்டுதோறும் தொடரும் பணி: மேலும், எங்களின் ஷேடோ வெட்ஸ் அமைப்பு மூலம் இப்பணி அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும், இறுதியாண்டு பயிற்சி மாணவர்கள் தலைமையில் தொடரும். அதற்காக அவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து வருகிறோம். இதற்காக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கட்செவி அஞ்சல், குழுக்கள் வாயிலாகவும் எங்கள் சமுதாயப் பணிகளை படங்களோடு பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இந்தத் தொடர் நிகழ்வால், மரக்கன்றுகள், மரங்களாகி நிழல் தருவதோடு, மழையும் தந்து இயற்கையை பாதுகாக்க வழிவகுக்கும் என்று பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...