
விழுப்புரத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ரூ.1.28 கோடி நலத் திட்ட உதவிகள் அளிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற 72-ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தேசியக் கொடியை
விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற 72-ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, 111 பயனாளிகளுக்கு ரூ.1.28 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில், புதன்கிழமை காலை 9.20 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலையில், திறந்த வெளி வாகனத்தில் சென்று, காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து காவல் துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, ஊர்காவல்படை, சாரண, சாரணியர், தேசிய மாணவர் படை, ஜுனியர் ரெட் கிராஸ் மாணவர் படையினரின் அணிவகுப்புகள் நடைபெற்றன. இதன் பிறகு, சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் நினைவாக, அமைதிக்கான வெண்புறாக்கள், வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விழாவில் பங்கேற்ற, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நலத்திட்ட உதவிகள்: விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாபில் திருமண நிதியுதவி திட்டத்தில் 3 பேருக்கு ரூ.40
ஆயிரம் உதவித்தொகை, வருவாய்த்துறை சார்பில் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித் தொகையாக 16 பேருக்கு ரூ.1.40 லட்சமும், கல்வி உதவித் தொகையாக 22 பேருக்கு ரூ.54 ஆயிரத்து 500-ம், இயற்கை மரண உதவித்தொகையாக 19 பேருக்கு ரூ.4.27 லட்சமும், நலிந்தோர் நிதியுதவித் தொகையாக ஒருவருக்கு ரூ.20 ஆயிரமும், விபத்து நிவாரண நிதியாக 4 பேருக்கு ரூ.4.10 லட்சமும் வழங்கப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பாக 7 பேருக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பில் சலவைப்பெட்டிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 4 பேருக்கு ரூ.39 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரம், சலவைப் பெட்டிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பாக 2 பேருக்கு ரூ.1.17 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிளும், தோட்டக் கலைத் துறை சார்பாக 6 பேருக்கு ரூ.7.47 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக் குடில், பவர் டில்லர் உள்ளிட்ட உபகரணங்கள், வேளாண்மைத் துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 5 பேருக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் மழைத் தூவான்கள், தாட்கோ மூலம் 11 பேருக்கு ரூ.97.58 லட்சம் மானியத்தில் பால் பண்ணை தொழில் மானியங்கள் மற்றும் வாகனங்கள், சிறுசேமிப்புப் பிரிவு சார்பாக 6 பேருக்கு ரூ.12 ஆயிரம் பரிசுத் தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 5 பேருக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் என மொத்தம் 111 பேருக்கு ரூ.1.28 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கலை நிகழ்ச்சிகள்: திருநாவலூர் வித்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மணியார்பாளையம் ஜி.டி.ஆர். மேல்நிலைப்பள்ளி, சாலாமேடு ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சுகர்ஸ் ராமகிருஷ்ணா வித்தியாலயா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து, 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற கண் கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற, மாணவர்கள் குழுவினருக்கு பரிசுக்கோப்பைகள் வழங்கப்பட்டன.
அரசுத் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்: சிறப்பாக பணியாற்றியமைக்காக, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, கல்வித் துறை, வனத் துறை, காவல் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளைச் சோர்ந்த 175 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் காவல் துணைத் தலைவர் சந்தோஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர், உதவி ஆட்சியர்கள் (பயிற்சி) சரவணன், காயத்ரி, வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், கோட்டாட்சியர்கள் சரஸ்வதி, தினேஷ், முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, துணை காவல் கண்காணிப்பாளர் ஜெ.சங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள், அரசு ஊழியர்கள், பொது மக்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





