நில பிரச்னை தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்தினருடன் பெண் தீக்குளிக்க முயன்றார்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பல்லக்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி மனைவி முனுசாயி (65).
இவர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை தனது மகன் ரமேஷ் (35), மருமகள் ராணி (25), இரு பேரக் குழந்தைகளுடன் வந்தார். பின்னர், அவர்கள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் இதைத் தடுத்து நிறுத்தி அவர்களைக் காப்பாற்றினர்.
இதுகுறித்து முனுசாயி கூறியதாவது:
விவசாயியான எனது கணவர் மாரிக்கு 6 ஏக்கர் நிலம் உள்ளது. மாரியும், அவரது முதல் மனைவி ஜெயாவும் இறந்துவிட்டனர். முதல் மனைவிக்கு சாமுண்டி என்ற மகனும், இரண்டாவது மனைவியான தனக்கு இளையராஜா, இளையராணி, உஷா, ரமேஷ், சுகந்தி ஆகியோர் உள்ளனர்.
8 ஆண்டுகளுக்கு முன்பு, எழுதப் படிக்கத் தெரியாத என்னிடம் தானமாக பத்திரம் எழுதி எனது மகன் இளையராஜா, நிலத்தை பட்டா மாற்றி குடும்ப சொத்தை அபகரித்துக்கொண்டார். என்னையும், எனது மகன், மகள்களையும் பராமரிக்காமல் மிரட்டி வெளியேற்றிவிட்டார்.
இதுதொடர்பாக எழுந்த பிரச்னையின் போது, போலீஸில் பொய்ப் புகார் அளித்து, என் மீதும், ரமேஷ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பூர்வீக சொத்தை ஏமாற்றி அபகரித்துக் கொண்ட இளையராஜா மீது நடவடிக்கை எடுத்து, சொத்துகளை மீட்டுத் தர வேண்டும்.
இதுதொடர்பாக, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர், சங்கராபுரம் வட்டாட்சியர், தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. விழுப்புரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்து, 7 ஆண்டுகளாக வழக்கு முடிக்கப்படாமல் பிரச்னைக்கும் தீர்வு காணப்படவில்லை என்றார் அவர்.
இதையடுத்து, முனுசாயி, ரமேஷ், ராணி, இவர்களது இரு குழந்தைகளையும் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.