குரூப்- 4 தேர்வு: 85,531 பேர் எழுதினர்

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் தேர்வை 85 ஆயிரத்து 531 பேர் எழுதினர்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் தேர்வை 85 ஆயிரத்து 531 பேர் எழுதினர்.
 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 494 கிராம நிர்வாக அலுவலர், 4,301 இளநிலை உதவியாளர், 3, 463 தட்டச்சர் பணி உள்ளிட்ட மொத்தம்
 9, 351 காலிப்பணியிடங்களுக்குக்கான குரூப்- 4 போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல் முறையாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குரூப் 4 தேர்வும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 98 ஆயிரத்து 726 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்பட 13 வட்டங்களில் 243 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெற்றது. 85, 531 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 13, 204 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.
 இந்த தேர்வில், புதிய முயற்சியாக தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் ஆகிய விவரங்கள் அச்சடிக்கப்பட்ட விடைத்தாள்கள் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டன.
 தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு போக்குவரத்து வசதி, தேர்வு மையங்களில் காவல் துறை பாதுகாப்பு வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. 52 பார்வை குறைபாடுடைய தேர்வர்கள் தேர்வெழுத உதவியாக ஸ்க்ரைப் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க 43 பறக்கும் படைகள், 62 நடமாடும் குழுக்கள், 334 அதிரடி ஆய்வு அதிகாரிகள் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, விழுப்புரம் வட்டாட்சியர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்தில் 47 மையங்களில் நடைபெற்ற குரூப்-4 தேர்வை 12,192 பேர் எழுதினர். தேர்வு எழுதுபவர்களை கண்காணிக்க, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் தி.ரா.மல்லிகா, நகராட்சி ஆணையர் சா.லட்சுமி, பதிவுத் துறை மாவட்ட பதிவாளர் ஆர்.சுப்பிரமணியன், கால்நடை ஊராட்சி உதவி இயக்குநர் எம்.எஸ்.ராஜா உள்ளிட்டோர் அடங்கிய பறக்கும் படையினர் 4 குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர்.
 மேலும், 9 நடமாடும் குழுக்களும் தேர்வை கண்காணித்தன.
 சின்னசேலம் வட்டத்தில் 16 மையங்களில் நடைபெற்ற தேர்வை 4,798 பேர் எழுதினர். 3 குழுக்களாக பறக்கும் படையினரும், 3 நடமாடும் குழுவினரும் தேர்வு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com