பெருகும் ஆக்கிரமிப்பால் திணறும் விழுப்புரம்! நிரந்தரத் தீர்வு எப்போது?
விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நகரம் கடுமையாகத் திணறி வருகிறது.


விழுப்புரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நகரம் கடுமையாகத் திணறி வருகிறது. மாற்று நடவடிக்கையாக, சில சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வந்தாலும் நெரிசல் குறையவில்லை. ஆகவே, பிரதான சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி, இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தனி வசதி ஏற்படுத்துவதே போக்குவரத்துப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நான்கு முனை சிக்னலில் இருந்து ரயிலடி வரையான 2 கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவை கடக்க, குறிப்பிட்ட வேளைகளில் சுமார் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை ஆகின்றன.
எனவே, வாகனப் போக்குவரத்தை இலகுவாக்க, கடந்த ஆண்டு விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முதல் காந்தி சிலை வரை, நேருஜி சாலையின் நடுவில் இருந்த 2 அடி அகல தடுப்புக் கட்டைகள் அகற்றப்பட்டன. இதன் காரணமாக சாலை விசாலமானதால், வாகன நெரிசல் பிரச்னை குறைந்திருக்க வேண்டும். மாறாக, அந்த சாலையோரம் ஆக்கிரமிப்பு மேலும் அதிகமாகி, பாதை குறுகி, போக்குவரத்தை மேலும் சிக்கலாக்கி விட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 பேருந்துகள் செல்லும் அளவுக்கு பரந்து விரிந்து காணப்பட்ட அந்த சாலையில் தற்போது, 2 பேருந்துகள் கூட செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளது. சாலையோரம் பாதசாரிகள் நடந்து செல்ல இடவசதியின்றி, சாலையில் பாதுகாப்பின்றி நடந்து செல்ல வேண்டியுள்ளது.
குறிப்பாக, கே.கே. சாலை சந்திப்புப் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுகிறது. இதற்கு கே.கே. சாலையில் இருந்து நேருஜி சாலை நோக்கி வரும் வாகனங்களே காரணம் எனக் கருதி, கே.கே. சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதன் மூலம், நேருஜி சாலை நோக்கி வரும் வாகனங்கள் பூந்தமல்லித் தெரு, பழைய பேருந்து நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டன.
எனினும், இந்த நடவடிக்கையால் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. விசாலமான கே.கே. சாலையோரம் இரு சக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள், விளம்பரப் பதாகைகள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, அந்த சாலை மேலும் குறுகி விட்டது. இதனால் நேருஜி சாலையில் இருந்து
கே.கே.சாலைக்கு வாகனங்கள் திரும்ப முடியாத அளவுக்கு நெரிசல் மிகுந்த இடமாக மாறிப்போனது.
தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டதால், காலை, மாலை நேரங்களில் பிரதான சாலைகள் யாவும் வாகனப் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடுமையாகத் திணறி வருகின்றன. மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், போக்குவரத்து பிரச்னையால், கால விரயம், எரி பொருள் விரயம் ஆவதுடன் வாகனப் புகையால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
தற்போது, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாய் விழுப்புரம் நீதிமன்றம் எதிரே உள்ள சுதாகர் நகர் பிரதான சாலையும் தற்போது ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பேருந்து கூட செல்லாத இந்த விசாலமான சாலை, குறிப்பிட்ட தொலைவு வரை உருவாகியுள்ள ஆக்கிரமிப்பு காரணமாக, குறுகிவிட்டது.
இந்த நடவடிக்கையாலும், போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை.
விழுப்புரம் நகரில் விசாலமான நெடுஞ்சாலைகள் இருந்தும், பாதசாரிகளுக்கு நடைபாதை வசதி இல்லை. பாதசாரிகள் நடந்து செல்லவேண்டிய பகுதியை பலர் கடை விஸ்தரிப்பு செய்தும், பதாகைகள் வைத்தும், நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்தும் போக்குவரத்துக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த இடையூறுகளை களையாமல், வாகனங்கள் செல்லும் சாலைகளை ஒரு வழிப் பாதையாக மாற்றுவதால் மட்டும் போக்குவரத்துப் பிரச்னைக்கு எந்த நிரந்தரத் தீர்வும் கிட்டாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எனவே, நகரில் சாலையில் குறுகலாகக் காணப்படும் இடங்கள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதை தடை செய்ய வேண்டும். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அவ்வப்போது மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...