/

பெருந்திட்ட வளாகப் பூங்காவில் நடைப்பயிற்சிக்கு கட்டுப்பாடு!

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. 

Updated On :21 மே 2018, 2:56 am

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. 
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் ஆட்சியரகம், மாவட்ட காவல் தலைமையகம், டி.ஐ.ஜி. அலுவலகம், பத்திரப் பதிவு, தீயணைப்புத் துறை, வனத்துறை, வேலைவாய்ப்புத் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள், அரசு அதிகாரிகள் குடியிருப்பு, ஊழியர்கள் குடியிருப்பு, நூலகம், உள்விளையாட்டு அரங்கம்,  நீச்சல் குளம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
 பேருந்து நிலையம் அருகிலேயே முக்கிய அலுவலகங்கள் அமைந்திருப்பதால், பெருந்திட்ட வளாகத்தில் பொழுதுபோக்கு அம்சமாக பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, சுமார் ரூ. 2 கோடி செலவில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. 
   இதற்காக,  மாநிலங்களவை உறுப்பினர் இரா.லட்சுமணன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முதல் கட்டமாக ரூ.1.25 கோடி நிதியும், இரண்டாம் கட்டமாக ரூ.80 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கிய பூங்கா அமைக்கும் பணி தற்போது வரை நிறைவடையவில்லை.
 நூலகத்துக்கு எதிரே 7.5 ஏக்கர் பரப்பளவில் பூங்காவைச் சுற்றி 6 அடி உயரத்தில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு, கிரில் கம்பிகள் பதிக்கப்பட்டு, இரண்டு இடங்களில் பொதுமக்கள் வந்து செல்ல நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவின் உள்புறமாக சுமார் 900 மீட்டர் தொலைவுக்கு 5 அடி அகலத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நடைபாதையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.
 இன்னும், பூங்காவின் உள்புறம் காலியாக உள்ள இடங்களில் பூச்செடிகள், புல்தரைகள் அமைத்தல், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், நீர்வீழ்ச்சி, அழகு சாதனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் நடைபெற வேண்டும். 
 பூங்கா அமைக்கும் பணி தாமதமாகி வருவதால், தற்போது நடைப்பயிற்சி மேற்கொள்ளவதற்காக அமைக்கப்பட்ட நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். 
காலை, மாலை நேரங்களில் பெண்கள், முதியவர்கள் உள்பட ஏராளமானோர் நடைப்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.  இந்த நிலையில், பூங்காவின் நுழைவாயிலில் காவல்துறை சார்பில், பொதுமக்கள் நலன் கருதி இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள மாலை 6.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்று அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது. 
முக்கிய அலுவலகங்கள், உயர் அதிகாரிகள் குடியிருப்புகள் அமைந்துள்ள இந்தப் பகுதியில் உள்ள பூங்காவில் மாலை 6.30 மணிக்குமேல் நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்க முடியாது என காவல்துறை கூறுவது பாதுகாப்பு காரணமாக இருக்குமேயானால், அது குறித்து யோசிக்க வேண்டியுள்ளது.
அதேவேளையில், உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி போன்றவை இன்றைய சூழலில் பொதுமக்கள் நாள்தோறும் செய்ய வேண்டிய ஒன்றாகிவிட்டது. 
வேலைக்குச் செல்வோர் பணிகளை முடித்து வீடு திரும்பவே மாலை 6 மணி ஆகிவிடுகிறது.கோடை காலத்தில் மாலை வரை வெயில் வாட்டி வதைக்கிறது. அதனால், மாலை 6 மணிக்குப் பிறகுதான், பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்ய விரும்புகின்றனர். 
ஆகவே,  பணிகளை  விரைவாக முடித்து பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், நடைப்பயிற்சி செய்ய தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் கூறியதாவது: பூங்கா உள்ளே இரவு நேரத்தில் தற்போது நடைப்பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அங்கு விளக்கு வெளிச்சம் இல்லை. விளக்குக் கம்பங்கள் அமைக்கும் பணி  நடைபெற்று வருகின்றன. ஆகவே, அங்கு விளக்குகள் அமைக்கப்பட்ட பிறகு, நடைப்பயிற்சி செய்வதற்கான அனுமதி நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டிக்கச் செய்யப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.