இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இ-அடங்கல் திட்டம்: விவசாயிகள் அதிருப்தி

தமிழகத்தில் ஜூலை 1 முதல் இணைய வழியில் செயல்படுத்தப்படவுள்ள இ-அடங்கல் திட்டம் காலதாமதத்தையும், வீண் செலவினத்தையும் ஏற்படுத்தும் என்று விவசாயிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும்

News image
Updated On :28 ஜூன் 2019, 3:01 am

இல. அன்பரசு

தமிழகத்தில் ஜூலை 1 முதல் இணைய வழியில் செயல்படுத்தப்படவுள்ள இ-அடங்கல் திட்டம் காலதாமதத்தையும், வீண் செலவினத்தையும் ஏற்படுத்தும் என்று விவசாயிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும் அதிருப்தி தெரிவித்தனர்.
 தமிழகத்தில் வருவாய்த் துறையால் வழங்கும் பல்வேறு சான்றிதழ்கள், பழைய முறையிலிருந்து மாற்றி, இணைய வழியில் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, விவசாயிகளுக்கு அவர்கள் பயிர் செய்துள்ள விவரங்களை அளிக்கும் அடங்கல் சான்றுகளும் இணைய வழியில் வழங்கும் திட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் அரசு செயல்படுத்தவுள்ளது.
 இதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களிலும், இ-அடங்கல் செயலி மூலம் இணைய வழியில் சான்று வழங்கும் முறைகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் வருவாய்த் துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அரை மணி நேரத்தில் கிடைத்து வரும் அடங்கல் சான்று, இந்த புதிய திட்டத்தின்படி இணைய வழியில் பெற 20 நாள்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி வரும் என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
 இதேபோல, இணைய வழியில் அடங்கல் சான்றிதழ் வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் என கிராம நிர்வாக அலுவலர்களிடம் அதிருப்தி நிலவுகிறது.
 இதுதொடர்பான தங்கள் கருத்துகளை தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கத்தினர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மனுவாக வழங்கியுள்ளனர்.
 இதுகுறித்து விழுப்புரம் முன்னோடி விவசாயிகள், கிராம நிருவாக அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் புஷ்பகாந்தன் உள்ளிட்டோர் கூறியதாவது:
 இணைய வழியில், எளிமைப்படுத்தும் திட்டங்களை வரவேற்கிறோம். இ-அடங்கல் திட்டத்தை செயல்படுத்த, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கணினி, இணைய வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் செய்யாமல் இந்தத் திட்டத்தை அமல்படுத்தவிருப்பது ஏமாற்றம் தருகிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் அவதிப்படுவர். இ-அடங்கல் என்னும் புதிய திட்டத்தால் விவசாயிகளுக்கு கூடுதல் காலதாமதமும் செலவினமும்தான் ஏற்படும்.
 இ-அடங்கலுக்கு விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்தவுடன், கிராம நிர்வாக அலுவலர் கள ஆய்வு செய்து பரிந்துரைப்பார். பிறகு, வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், உதவி ஆட்சியர் ஆகியோர் மேற்பார்வையிட்டு பரிந்துரை செய்து, மாவட்ட வருவாய் அலுவலரால் ஆய்வு செய்து, இறுதியாகச் சான்று வழங்கப்பட வேண்டும்.
 இதனிடையே, வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்களும் இதைப் பார்வையிடுவர். இதற்கான காலக்கெடு குறித்து எந்தத் தகவலும் இல்லை.
 எனினும், இந்த நடைமுறையைச் செயல்படுத்த 20 நாள்களுக்கு மேலாகும். தற்போதுள்ள நடைமுறையில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து, 30 நிமிடங்களில் அடங்கல் பதிவை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
 மேலும், இதுவரை அடங்கலை இலவசமாக பெற்று வந்த விவசாயிகள், இனி கணினியில் பதிவேற்றம் செய்து, அதை வழங்க ரூ.100 கட்டணம் என அரசே நிர்ணயித்திருப்பது கூடுதல் செலவினம்தான். தவிர, இணைய வழி பதிவுக்கும் அரசு மற்றும் தனியார் சேவை மையங்களில் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும். இதற்கான தெளிவான நடைமுறையும் வகுக்கப்படவில்லை. விவசாயிகள் அடங்கல் பெறவும், பதிவு செய்யவும் நகரப் பகுதிக்கு வந்தாக வேண்டும். கூடுதல் செலவினங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இ-அடங்கலை பட்டாதாரர் பெயரில்தான் வழங்க முடியும். ஆனால், பெரும்பான்மை விவசாயிகள் தங்கள் பெற்றோர்கள், முன்னோர்கள் பெயரில்தான் பட்டா வைத்துள்ளனர். சிலர் குத்தகைக்கும் பயிரிடுகின்றனர். இவர்களுக்கு இ-அடங்கல் பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 10 ஆண்டுகளாக பட்டா மாற்றப் பதிவுகள், நிலப்பதிவேட்டில் முழுமையாக பதியப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, இ-அடங்கலில் இணைய வழியில் விண்ணப்பித்தவரை தேடி ஆய்வு செய்து, வழங்குவதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
 இதுபோன்ற பிரச்னைகளை களையாமல், ஜூலை 1-ஆம் தேதி முதல் இ-அடங்கல் திட்டத்தை செயல்படுத்துவதால், விவசாயிகளும், கிராம நிர்வாக அலுவலர்களும்தான் பாதிக்கப்படுவர். இதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைகளை களைந்து செயல்படுத்த வேண்டும் என்று, இந்தத் திட்ட அதிகாரிகளிடம் கருத்துகளைத் தெரிவித்துள்ளோம் என்றனர்.
 

"இந்த நடைமுறையைச் செயல்படுத்த 20 நாள்களுக்கு மேலாகும். தற்போதுள்ள நடைமுறையில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து, 30 நிமிடங்களில் அடங்கல் பதிவை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர்."
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.