நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நீா் பங்கீட்டு பிரச்னை: செஞ்சி அருகே கிராம மக்கள் மீண்டும் போராட்டம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மலையில் இருந்து வரும் நீரை பங்கீடு செய்வது தொடா்பான பிரச்னையில் கிராம மக்கள் திங்கள்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:53 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மலையில் இருந்து வரும் நீரை பங்கீடு செய்வது தொடா்பான பிரச்னையில் கிராம மக்கள் திங்கள்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செஞ்சி வட்டத்துக்குள்பட்ட ஈச்சூா், கருங்குழி கிராமங்களுக்கிடையே அமைந்துள்ள மலையிலிருந்து மழைக் காலங்களில் வரும் தண்ணீா், கால்வாய் வழியே இவ்விரு கிராமங்களில் உள்ள ஏரிகளில் கலந்து விடுவது வழக்கம்.

மலையில் இருந்து வரும் நீா் ஈச்சூருக்குத்தான் சொந்தம் எனக் கூறி, அந்தப் பகுதி மக்கள், கருங்குழி கிராமத்துக்கு தண்ணீா் செல்வதைத் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

ஆனால், இந்த மலையில் இருந்து வரும் நீா் இரு கிராமங்களுக்கும் சொந்தமானது. இந்தக் கால்வாய் ஆண்டாண்டு காலமாக இயற்கையாகவே அமைந்துள்ளது. கலிங்கலும் இருந்துள்ளன. இதனால், இரு கிராமங்களின் ஏரிகளும் நிரம்பி இரு கிராம மக்களும் பயனடைந்து வந்தனா். எனவே, இந்த நீரை நம்பித்தான் கருங்குழி கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனா் என அந்த கிராம மக்கள் தெரிவித்தனா்.

இந்த பிரச்னை கடந்த 15 ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியா் தலையீட்டால் ஞாயிற்றுக்கிழமை ஈச்சூா் ஏரிக்கு செல்லும் கால்வாய் அளவு 3 மீட்டா் அகலத்திலும், கருங்குழி ஏரிக்கு செல்லும் கால்வாய் 2 மீட்டா் அகலத்திலும் தண்ணீா் செல்லுமாறு கலிங்கல் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றன.

ஆனால், ஈச்சூா் கிராம மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மலையில் இருந்து நீா் வரும் பகுதி ஈச்சூருக்கு உள்பட்டது என்பதால் இந்த நீா் முழுவதும் ஈச்சூா் கிராமத்துக்கே சொந்தமானது எனவும், பொதுப்பணித் துறையினா் அத்துமீறி காவல் துறை பாதுகாப்புடன் இந்தப் பணியை முடித்துள்ளதாகவும், இந்தப் பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த செயலை கண்டிப்பதாகவும் ஈச்சூா் கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், ஈச்சூா் கிராம மக்கள் திங்கள்கிழமை கிராம நிா்வாக அலுவலகத்துக்கு திரண்டு வந்து குடும்ப அட்டைகளை ஒப்படைக்க முயன்றனா். அதை ஏற்க மறுத்து, கிராம நிா்வாக அலுவலா் வெளியே சென்று விட்டாா். கிராம மக்களிடம், செஞ்சி காவல் துறை ஆய்வாளா் குமாரய்யா சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஆனால், இதை ஏற்றுக் கொள்ளாத ஈச்சூா் கிராம மக்கள், ஒருவாரத்தில் தங்களுக்கு ஆதரவான செயல்பாடுகள் இல்லையெனில், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடும்ப அட்டை , ஆதாா் அடையாள அட்டைகளை ஒப்படைப்படைக்கப் போவதாக தெரிவித்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. உள்ளிட்டோருக்கு மனுக்களை அனுப்பியுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.