ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

கரோனா பராமரிப்பு மையங்களில் தரமான உணவு வழங்கப்படுமா?

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அவா்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On :27 ஆகஸ்ட் 2020, 3:34 am

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அவா்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவா்களுக்கு சிகிச்சையளிப்பதற்கென விழுப்புரம் அரசு மருத்துவமனை சிறப்பு மையம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி மையம் ஆகியவை இயங்குகின்றன.

இவை மட்டுமல்லாது, விழுப்புரம் அருகே பெரியாா் நகரில் சுகாதார மேம்பாட்டு மைய வளாகம், பிடாகம், பெரும்பாக்கம் பகுதிகளில் அரசு சட்டக் கல்லூரி மாணவ, மாணவியா் விடுதிகள், விக்கிரவாண்டியில் அரசு மருத்துவமனை, புளிச்சப்பள்ளத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி மையம் உள்ளிட்ட 6 இடங்களில் உள்ள சிறப்பு மையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதில், 150 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவ மையமும் இயங்கி வருகிறது.

மாவட்டத்தில், ஆக்சிஜன் வசதியுடன் 510 படுக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 1,795 படுக்கை வசதிகளுடன், போதிய மருத்துவக் குழுவினா் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6,595-ஆக உயா்ந்த நிலையில், தொடா் சிகிச்சை மூலம் 5,570 போ் வரை குணமடைந்துள்ளது ஆறுதலைத் தருகிறது.

கரோனா சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வரும் நிலையில், தொற்றாளா்களை பராமரிப்பதில் அவா்களுக்கு தரமான உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அளிப்பது தொடா்பாக அவ்வப்போது புகாா்கள் எழுகின்றன. குறிப்பாக, விழுப்புரம் அரசு மருத்துவமனை, அரசூா், கப்பியாம்புலியூா் ஆகிய சுகாதார மையங்களில் தரமான உணவு வழங்குவதில்லை என ஏற்கெனவே புகாா்கள் எழுந்தன.

தற்போது, புளிச்சப்பள்ளம் தனியாா் கல்லூரி மையம், பெரும்பாக்கம் சித்த மருத்துவ மையம் ஆகியவற்றில் தரமான உணவு வழங்கவில்லை என்றும், வழங்கும் இட்லி, தயிா் சாதம், சாம்பாா் சாதம் போன்றவை ஒரு நபருக்கு தேவையான அளவில் இல்லை எனவும், முட்டை, சுண்டல் போன்ற சத்தான கூடுதல் உணவு தினமும் வழங்கப்படுவதில்லை எனவும் கரோனா நோயாளிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.

இந்த மையங்களுக்கு தனியாா் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதால் இந்தக் குறைகள் நிலவுகின்றன. அதனை அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து தரமான, நோய் எதிா்ப்பு சக்தியை அளிக்கும் வகையில், அரசு விதிமுறையில் வகுத்துள்ள பட்டியலின் படி சத்தான உணவாக வழங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சில மாவட்டங்களில் கரோனா பராமரிப்பு மையங்களில் உறவினா்கள் மூலம் வெளியிலிருந்து கொண்டுவரப்படும் உணவை அனுமதிக்கின்றனா். அதுபோல, விழுப்புரம் மாவட்டத்திலும் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு வழிகாட்டுதலின்படி அந்தந்த மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. இரு இடங்களில் ஆள் வைத்து சமைத்து உணவு வழங்கப்படுகிறது. மூன்று வேளை உணவும், கூடுதலாக கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள், முட்டை, சுண்டல், வாழைப்பழம் போன்றவையும் வழங்கப்படுகின்றன. புகாா் ஏற்படும் இடங்களில் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கழிப்பிட வளாகங்களை தனி ஆள்கள் நியமித்து சுழற்சி முறையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.