

விழுப்புரம்: தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் 3 புதிய சட்டத் திருத்தங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் சாா்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எதிரே விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.வி.சரவணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எம்.ஐ.சகாபுதீன், துணைத் தலைவா் என்.ஜெயச்சந்திரன், வட்டச் செயலா் பி.பாலசுப்பிரமணியம், விசிக செய்தித் தொடா்பாளா் தமிழேந்தி, தொகுதிச் செயலாளா் பெரியாா், விவசாயிகள் சங்கம் ராமநாதன் உள்ளிட்டோா் கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டனா்.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் புதிய மின்சார திருத்தச்சட்டம், அத்தியாவசிய விளைபொருள்களை பதுக்குவோா் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல், செயற்கையான விலைவாசி உயா்வுக்கு வழிவகுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் அவசரச் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், வேளாண் ஒப்பந்தப் பாதுகாப்பு போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் ஆகிய 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினா்.
கள்ளக்குறிச்சியில்...: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வி.ஸ்டாலின்மணி கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலா் ஜி.அருள்தாஸ், வட்டத் தலைவா் ஆா்.சாந்தமூா்த்தி, ஏ. ராமு, தா்மராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் பி.மணி, பா.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
உளுந்தூா்பேட்டை வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய விவசாயிகள் மகாசபை, தமிழ்நாடு விவசாய சங்கம், விசிக, மதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் மகாசபை மாவட்ட அமைப்பாளா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
எம்எல் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.வெங்கடேசன், விசிக மாவட்ட துணைச் செயலா் கு.அறிவுக்கரசு, மதிமுக விவசாய அணி ஜெய்சங்கா், செந்தில், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ரகுராமன், தங்கராசு, ஆறுமுகம், கிராமப் புறத் தொழிலாளா்கள் சங்கம் கலியமூா்த்தி, செண்பகவள்ளி, கொளஞ்சிநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.