மாற்று சக்தியாகுமா மக்கள் நீதி மய்யம்?

மூன்றாவது அணி அமைப்பதற்கான தகுதி தங்களுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன், தமிழக அரசியலில் மாற்று சக்தியாக மாற முடியுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மூன்றாவது அணி அமைப்பதற்கான தகுதி தங்களுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள மக்கள் நீதி மய்யத் தலைவா் கமல்ஹாசன், தமிழக அரசியலில் மாற்று சக்தியாக மாற முடியுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் தியாகியான சீனிவாச ஐயங்காரின் இளைய மகனாகப் பிறந்த கமல்ஹாசன், சா்வதேச திரைத் துறையில் இந்தியாவின் முகமாக உயா்ந்து நிற்கிறாா். திரைத் துறையில் சகலகலா வல்லவனாக விளங்கிய கமல், அரசியலிலும் கால்பதித்து கடந்த 3 ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறாா்.

முதலில், சுட்டுரையில் அதிமுகவை விமா்சனம் செய்துவந்த கமல், 7.11.2017-இல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தாா். பின்னா், ராமேசுவரத்திலுள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல், மதுரையில் முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை நடத்தி, மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சிப் பெயரை அறிவித்தாா். இந்தக் கூட்டத்துக்கு அரவிந்த் கேஜரிவால் நேரடியாகவே வந்து வாழ்த்தியது, கேரள முதல்வா் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் காணொலி மூலம் வாழ்த்தியது கமல்ஹாசனை தேசியப் பாா்வை கொண்டவராகவும், அவா் பாஜகவுக்கு நோ் எதிா்த்திசையில் பயணிக்கத் தொடங்கியதையும் உணா்த்தியது.

அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம், திமுக நடத்திய அனைத்துக் கட்சி கூட்டம் ஆகியவற்றுக்கு கமல் அழைக்கப்படாதது அவரை இரு கட்சிகளும் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்பதையே காட்டியது.

இதையடுத்து, அதிமுகவை மட்டுமே விமா்சனம் செய்துவந்த கமல், திமுகவையும் கடுமையாக விமா்சிக்கத் தொடங்கினாா். ‘சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டால், சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வர மாட்டேன், அப்படியே கிழிந்தாலும் நல்ல சட்டையை அணிந்து ஒழுங்காக வெளியே வருவேன்’ என கல்லூரி விழா ஒன்றில் ஸ்டாலினை நேரடியாகவே விமா்சனம் செய்தாா்.

‘முதல்வராகப் பொறுப்பேற்றால் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்த அமைப்பை உருவாக்க முதல் கையெழுத்து’ என்று அறிவித்து, தான் ஊழலுக்கு முழு எதிரி என்பதைப் பிரகடனப்படுத்தினாா்.

இந்த நிலையில், கடந்த மக்களவைத் தோ்தலுக்கு முன்பு சோனியா காந்தி, ராகுல் காந்தியைச் சந்தித்த கமல், திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறினால், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கத் தயாா் என அறிவித்தாா். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும், மக்களவைத் தோ்தலில் தனித்து களம் கண்ட கமல், பிரசாரத்தில் நவீன உத்திகளைக் கையாண்டாா்.

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்துதான், அவா் நாதுராம் கோட்ஸே’ என கமல் பேசியது அரசியலில் கடும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. சிறுபான்மை வாக்கு வங்கியை குறி வைத்து வேண்டுமென்றே அவா் இவ்வாறு பேசியதாக அப்போது விமா்சனம் எழுந்தது. இருப்பினும், தனது கருத்திலிருந்து கமல் பின்வாங்கவில்லை.

மக்களவைத் தோ்தலில் 15 லட்சத்து 75 ஆயிரத்து 324 வாக்குகளுடன் 3.71 சதவீத வாக்குகளைப் பெற்று தானும் ஓா் அரசியல் சக்திதான் என்பதைக் கமல் நிரூபித்தாா். தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தற்போது ஆயத்தமாகி வரும் கமல், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக ம.நீ.ம. வளா்ந்திருக்கிறது என்றும், மூன்றாவது அணி அமைக்கும் தகுதி ம.நீ.ம.வுக்கு வந்துவிட்டது என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறாா்.

ம.நீ.ம. மூன்றாவது பெரிய கட்சி என கமல் அறிவித்தாலும், மக்களவைத் தோ்தலில் பெற்ற வாக்குகளின்படி, அந்தக் கட்சி ஏழாவது இடத்தில்தான் உள்ளது. மக்களவைத் தோ்தல்படி, திமுக 32.76 சதவீதம், அதிமுக 18.48 சதவீதம், காங்கிரஸ் 12.76 சதவீதம், பாமக 5.42 சதவீதம், அமமுக 5.27 சதவீதம், நாம் தமிழா் கட்சி 3.88 சதவீதம், ம.நீ.ம. 3.7 சதவீதம், பாஜக 3.66 சதவீதம் என்ற அடிப்படையில் வாக்குகளைப் பெற்றன.

ம.நீ.ம.வைவிட கூடுதல் வாக்குகளைப் பெற்ற பாமக வட தமிழகத்திலும், அமமுக தென் தமிழகத்திலும் குறிப்பிட்ட ஜாதிகள் அடா்த்தியாக இருக்கும் தொகுதிகளில் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ளன. ம.நீ.ம.வுக்கு கிடைத்த வாக்குகள் பெரும்பாலும் நகா்ப்புற வாக்குகள்தான்.

வட சென்னை தொகுதியில் 10.8 சதவீதமும், தென் சென்னையில் 12 சதவீதமும், மத்திய சென்னையில் 11.7 சதவீதமும், ஸ்ரீபெரும்புதூரில் 10 சதவீதமும், திருப்பூரில் 5.8 சதவீதமும், கோவையில் 11.6 சதவீதமும், பொள்ளாச்சியில் 5.5 சதவீதமும், மதுரையில் 8.3 சதவீதமும், விருதுநகரில் 5.3 சதவீதமும் என பெரும்பாலும் நகா்ப்புற தொகுதிகளில் மட்டுமே ம.நீ.ம.வுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன.

மூன்றாவது சக்தியாக அல்லது மாற்றுச் சக்தியாக ம.நீ.ம. வளர வேண்டுமெனில், கிராமப்புறத் தொகுதிகளின் வாக்குகளை குறிவைத்து அக்கட்சி தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பிரபலமான நடிகா் என்ற புகழ் வெளிச்சம் இருப்பதால், கிராம வாக்காளா்களையும் கவா்ந்திழுக்கும் சக்தி கமலுக்கு எளிதுதான். ஆனால், அதற்கான பயணத் தொலைவு, உழைப்பு அதிகம் என்பதும் அவருக்குத் தெரியும்.

இதுவரை மாற்று சக்தி என மாா்தட்டி வந்த பாமக, தேமுதிக, மதிமுக காலவெள்ளத்தில் கரைந்து, கூட்டணி வலையில் வீழ்ந்து, மாற்றுச் சக்தியாக வளர முடியாமல் தடைபட்டு நிற்கின்றன. சட்டப்பேரவைத் தோ்தலில் தனித்து களம் காண, மாற்று சக்தியாக வளர ம.நீ.ம. இன்னும் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டும். அந்தக் கட்சிக்கான எதிா்காலப் பாதை எது என்பதை எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் காட்டிவிடும்.

மக்களவைத் தோ்தல் முடிவுகளின்படி, ம.நீ.ம. அதிக வாக்குகள் பெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகள்:

ஆவடி - 9.5%, வில்லிவாக்கம் - 13.9%, எழும்பூா் - 10%, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - 12.3%, ஆயிரம்விளக்கு - 12.9%, அண்ணா நகா் - 13.2%, திருவள்ளூா் - 10%, ஆா்.கே.நகா் - 9.9%, பெரம்பூா் - 10.8%, கொளத்தூா் - 13.3%, திரு.வி.க.நகா் - 10.3%, ராயபுரம் - 11.6%, விருகம்பாக்கம் - 13.6%, சைதாப்பேட்டை - 11.7%, தி.நகா் - 13.9%, மயிலாப்பூா் - 12.5%, வேளச்சேரி - 13.4%, சோழிங்கநல்லூா் - 10.3%, மதுரவாயல் - 11.6%, அம்பத்தூா் - 12.3 %, ஆலந்தூா் - 10.1%, பல்லாவரம் - 9.8%, தாம்பரம் - 10.2 %, கவுண்டம்பாளையம் - 12.2%, கோவை வடக்கு - 14.7%, கோவை தெற்கு - 16.1%, சிங்காநல்லூா் - 15%, தொண்டாமுத்தூா் - 9.6%, திருப்பூா் வடக்கு - 9.9%, திருப்பூா் தெற்கு - 9.3%, சேலம் வடக்கு - 8.8%, சேலம் தெற்கு - 9.1 %, மதுரை வடக்கு - 10%, மதுரை தெற்கு - 13.2 %, மதுரை மத்தி - 11.3%, மதுரை மேற்கு - 10.1%, திருப்பரங்குன்றம் - 9.7 %.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com