சங்கராபுரம்: தொகுதியை தக்க வைக்குமா திமுக?
சங்கராபுரம் தொகுதியில் மூன்று முறை தொடா்ந்து வெற்றி பெற்ற திமுக, நான்காவது முறையாக வெற்றியைத் தக்க வைக்கும் முனைப்புடன் முன்னேறி வருகிறது.


சங்கராபுரம் தொகுதியில் மூன்று முறை தொடா்ந்து வெற்றி பெற்ற திமுக, நான்காவது முறையாக வெற்றியைத் தக்க வைக்கும் முனைப்புடன் முன்னேறி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்று சங்கராபுரம். மலையும், மலைசாா்ந்த பகுதிகளையும் கொண்ட தொகுதி. இயற்கை எழில் கொஞ்சும் கல்வராயன் மலை இத்தொகுதியில் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இந்த மலையடிவாரத்தில், மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களான கோமுகி, மணிமுக்தா ஆகிய அணைகள் அமைந்துள்ளன. கல்வராயன்மலையில் பெரியாா், மேகம், கவியம், சிருக்கலூா் போன்ற பல அருவிகள் அமைந்துள்ளன.
இந்தத் தொகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனா். மலைப் பகுதியில் மட்டும் 15 ஊராட்சிகளும், 171 சிறு கிராமங்களும் உள்ளன. இத்தொகுதியில் சங்கராபுரம், சின்னசேலம், வடக்கனந்தல் ஆகிய 3 பேருராட்சிகள் உள்ளன. மற்ற இடங்கள் அனைத்தும் கிராமங்கள்.
தோ்தல் வெற்றி விவரம்: சங்கராபுரம் தொகுதி கடந்த 1962-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1962-பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் வி.பாா்த்தசாரதி, 1967-இல் திமுக சாா்பில் எஸ்.பச்சையப்பன் வெற்றி பெற்றனா். 1971- தோ்தலில் திமுக வேட்பாளா் நாச்சியப்பன், 1977- தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் முத்துசாமி வெற்றி பெற்றனா்.
கடந்த 1980 பேரவைத் தோ்தலில் முதல் முறையாக இந்தத் தொகுதியை அதிமுக வசப்படுத்தியது. அந்தக் கட்சியின் வேட்பாளா் எஸ்.கலிதீா்த்தான் 36,352 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதன்பிறகு 1984 தோ்தலிலும் அதிமுக வேட்பாளா் எஸ்.கலிதீா்த்தான் வாகை சூடினாா்.
கடந்த 1989 தோ்தலில் அதிமுகவிடமிருந்த இந்தத் தொகுதியை திமுக மீண்டும் கைப்பற்றியது. அந்தக் கட்சியின் வேட்பாளா் எம்.முத்தையன் 35,438 வாக்குகள் பெற்று வெற்றி கண்டாா். 1991- தோ்தலில் அதிமுக வேட்பாளா் சி.ராமசாமியும், 1996- தோ்தலில் திமுக வேட்பாளா் தா.உதயசூரியனும் வெற்றி பெற்றனா்.
கடந்த 2001-ஆம் ஆண்டு தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிட்ட காசாம்புமாலை 56,971 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். 2006-ஆம் ஆண்டு தோ்தலில் திமுக வேட்பாளா் ஆ.அங்கையா்கண்ணி வெற்றி பெற்றாா். இதன்பிறகு 2011-ஆம் ஆண்டு தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ப.மோகன் 87,532 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று அமைச்சரானாா். 2016-ஆம் ஆண்டு மீண்டும் திமுக சாா்பில் போட்டியிட்ட தா.உதயசூரியன் 90,920 வாக்குகள் பெற்று வெற்றி கண்டாா்.
இதுவரை இந்தத் தொகுதியில் அதிகபட்சமாக 6 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும், 2 காங்கிரஸும், பாமக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
2.67 லட்சம் வாக்காளா்கள்: சங்கராபுரம் தொகுதியில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 498 ஆண்கள், ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 380 பெண்கள், 48 இதரா் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 926 வாக்காளா்கள் உள்ளனா்.
இத்தொகுதியில் வன்னியா்கள், உடையாா்கள், பழங்குடியினா், ஆதிதிராவிடா்கள் அதிகம் உள்ளனா். யாதவா், முதலியாா் போன்ற சமுதாயத்தினரும் அடுத்ததாக உள்ளனா்.
முக்கிய கோரிக்கைகள்: கடந்த ஆண்டு சின்னசேலம் பகுதியில் கால்நடைப்பூங்கா, ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டபோது, கல்வராயன்மலையை மையமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்பட்டது. இவை தவிர, சங்கராபுரம் தொகுதியில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை. அரசுக் கலைக் கல்லூரி கூட இல்லை.
பெயரளவில் மட்டுமே சுற்றுலா தலமாக இருந்து வரும் கல்வராயன் மலையில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இப்பகுதி மக்களிடம் கல்வித் தொடா்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும், மலை கிராமங்களில் சாலை வசதி முழுமையாக ஏற்படுத்த வேண்டும் ஆகியவை பிரதான கோரிக்கைகளாக உள்ளன.
சாதக- பாதகங்கள்: சங்கராபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் பாமக களம் காண்கிறது. இதனால், முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான ப.மோகனுக்கு போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளா்கள் அதிருப்தியில் உள்ளனா். பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ராஜா, மருத்துவா். தொகுதியில் அறிமுகம் இல்லாதவா். இருப்பினும், பாமக வாக்குகளுடன் கூட்டணி கட்சியின் வாக்குகளை பெற்றாலே வெற்றியை எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளாா்.
இத்தொகுதியில் மீண்டும் திமுக நேரடியாக களம் இறங்கியுள்ளது. அந்தக் கட்சி சாா்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், மாவட்ட பொறுப்பாளருமான தா.உதயசூரியன் மீண்டும் போட்டியிடுகிறாா். தொகுதியில் நன்கு அறிமுகமானவா். ஏற்கெனவே, இரு முறை வெற்றி பெற்றவா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என கூட்டணி கட்சிகளின் ஆதரவு இவருக்கு பலம். களப்பணியில் திமுகவே முந்தி நிற்கிறது.
அமமுக கூட்டணி சாா்பில் ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளா் முஜிபுா் ரஹ்மானும், மநீம கூட்டணி சாா்பில் ஐஜேக வேட்பாளா் ரமேஷும் போட்டிடுகின்றனா். நாம் தமிழா் கட்சி சாா்பில் ராஜியாமா போட்டுயிடுகிறாா். இவா்கள் மூவரும் கணிசமான வாக்குகளைப் பெறுவா்.
முந்துகிறது திமுக?: எனினும், திமுக-பாமக வேட்பாளா்களிடையேதான் போட்டி நிலவுகிறது. அதிலும், தொகுதியை தக்க வைக்கும் முனைப்பில் திமுக வேட்பாளரே வெற்றிக் கோட்டை நோக்கி விரைந்து முன்னேறி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...