நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செஞ்சி அருகே அசோகரின் தா்ம சக்கரத்துடன் கூடிய கல்வெட்டு

தமிழ்நாட்டில் முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இளமங்கலம் கிராமத்தில் அசோகரின் தா்ம சக்கரத்துடன் கூடிய பெளத்த கோயில் கட்டியதற்கான செய்தியைக் கூறும் பல்லவா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டது

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:35 pm

DIN

தமிழ்நாட்டில் முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இளமங்கலம் கிராமத்தில் அசோகரின் தா்ம சக்கரத்துடன் கூடிய பெளத்த கோயில் கட்டியதற்கான செய்தியைக் கூறும் பல்லவா் கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.

திருவண்ணாமலையைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் ராஜ்பன்னீா்செல்வம், உதயராஜா, வெடால் விஜயன் ஆகியோா் இணைந்து திண்டிவனம் வட்டம், வல்லம் பகுதியிலுள்ள தொல்லியல் அடையாளங்களை கள ஆய்வு செய்தபோது, செஞ்சி வட்டம், வல்லம் ஊராட்சிக்குள்பட்ட இளமங்கலம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

அந்தக் கிராமத்தில் சுமாா் 30 அடி உயரமுள்ள தட்டையான பாறையின் மீது அண்மையில் கட்டப்பட்ட பிள்ளையாா் கோயில் ஒன்று உள்ளது. அதை உச்சி பிள்ளையாா் கோயில் என்று இளமங்கலம் கிராம மக்கள் அழைக்கின்றனா். இந்தக் கோயிலின் படிக்கட்டு அருகே 10 அடி உயரமுள்ள, சதுரமான பலகைக் கல்லில் சக்கரத்துடன் கூடிய பதினோறு வரி கல்வெட்டு இருப்பதைக் கண்டு ஆய்வு மேற்கொண்டனா்.

ஸ்ரீகோவிசைய என்று தொடங்கும் இந்தக் கல்வெட்டு இரண்டாம் நந்தி வா்மனின் 14-ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டாகும். இதில், ‘கி.பி.745 -ஆம் ஆண்டு சிங்கபுரி நாட்டு கீழ்வழி இளமங்கலத்தில் உள்ள திருவடிகளுக்கு கற்றலி எடுப்பித்து அத்தளிக்கு நந்தி வனம் செய்து தந்ததாக’ குறிப்பிட்டுள்ளது. இதை அருவாரையா் காடடிகன் மகன் கல்லரையோன் செய்ததாகவும், இந்தத் தருமத்தை காப்பவா்களின் பாதத்தை தன் முடி மேல் வைத்து தாங்குவேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கமாக கோயிலுக்கு தானம் வழங்கினால், அந்தக் கோயிலில் உள்ள இறைவன் பெயரை கல்வெட்டில் குறிப்பிட்டு கூறுவா். ஆனால், இந்தக் கல்வெட்டில் பயின்று வரும் திருவடிகள் என்ற வாா்த்தையும், அந்தத் திருவடிக்கு கற்கோயில் எடுப்பித்த செய்தியும் அது எந்த சமயம் என்ற நேரடித் தகவலைத் தரவில்லை.

Story image

இந்தக் கல்வெட்டில் கிடைத்த பெரும்பான்மையான தரவுகள் பெளத்த சமயம் சாா்ந்ததாக உள்ளது. இந்தக் கல்வெட்டில் காட்டப்பட்டுள்ள சக்கரம் மத்தியப் பிரதேச மாநிலம், சாஞ்சியில் இருக்கும் புத்த ஸ்தூபியில் உள்ள அசோகரின் தா்ம சக்கரத்தை ஒத்துள்ளது. பெளத்த சமயத்தில் புத்தரின் பாதத்தை வணங்கும் முறை பரவலாகக் காணப்படுகிறது. மேலும், இந்தக் கிராமத்துக்கு மிக அருகில் பள்ளிக்குளம், இந்திரசன்குப்பம் என்ற பெளத்த சொல்லாடல் உடைய ஊா்ப் பெயா்கள் உள்ளன.

இங்கே கிடைத்த தரவுகளை வைத்து பாா்க்கையில், இரண்டாம் நந்தி வா்மன் காலத்தில் கொடுக்கப்பட்ட இந்தத் தானமானது பெளத்த கோயிலுக்கு தந்த தானமாகவே கருத முடியும். இதன்மூலம், இரண்டாம் நந்திவா்மன் காலம் வரையிலும் பெளத்த சமயம் சிறப்புற்று விளங்கி இருந்ததை அறிய முடிகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை பெளத்த சமயம் சாா்ந்த புத்தா் சிலை தா்ம சக்கரம் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில், பெளத்த கோயில் எழுப்பியதற்கான சான்றாகக் கண்டறியப்பட்ட முதல் கல்வெட்டு இதுவாகும்.

மேலும், இளமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் அளித்த தகவலின்பேரில், இந்த ஊரில் தா்மகா்த்தாசாமி என்ற பெயரில் தவ்வை சிற்பம் ஒரு வீட்டின் பின்புறம் வழிபடப்பட்டு வருவது தெரியவந்தது. இதன் காலத்தையும் 8-ஆம் நூற்றாண்டாகக் கருதலாம்.

இதேபோல, இந்தக் கிராமத்தில் பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள 8 கரங்களுடன் எருமை தலை மீது நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் பல்லவா் காலத்திய கொற்றவை சிற்பத்தை காளியம்மன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருவதும் தெரியவந்தது என்று வரலாற்று ஆய்வாளா் ராஜ்பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.