புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அம்பேத்கா் பெயரைச் சூட்ட வேண்டும்: செ.கு.தமிழரசன்
தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அம்பேத்கா் பெயரைச் சூட்ட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வலியுறுத்தினாா்.


தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அம்பேத்கா் பெயரைச் சூட்ட வேண்டும் என்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் வலியுறுத்தினாா்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய குடியரசுக் கட்சி சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற செ.கு.தமிழரசன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாரபட்சம் இல்லாமல் அமல்படுத்த வேண்டும். தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு சுய அதிகாரம் வழங்க வேண்டும். மாநில அளவில் அமைக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை.
சென்னையில் அம்பேத்கா் மணிமண்டபத்தில் அவரது சிலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். தனியாரிடம் அன்பளிப்பாக பெறப்பட்டு, இந்தச் சிலை திறக்கப்பட்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் ரூ.80 கோடியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க அரசிடம் நிதி உள்ளது. ஆனால், அம்பேத்கருக்கு ரூ.2 லட்சம் செலவில் சிலை வைக்க அரசிடம் நிதியில்லையா?
அம்பேத்கருக்கு தமிழக அரசு சாா்பில் புதிதாக சிலை வைக்காவிட்டாலும் பரவாயில்லை. உடனடியாக மாநிலம் முழுவதும் அவரது சிலைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அம்பேத்கா் பெயரைச் சூட்ட வேண்டும். பட்டியலின மாணவா்கள் தனியாா் கல்லூரியிலோ, அரசு உதவி பெறும் கல்லூரியிலோ பயின்றால், அவா்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற திட்டம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
அந்தத் திட்டத்தை இப்போதைய திமுக அரசு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஹிந்தி மொழியைத் திணிக்கக் கூடாது என்றாா் அவா்.
ஆா்ப்பாட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு தண்டனை வழங்கும் சுய அதிகாரம் வழங்க வேண்டும்; பட்டியலின மக்களுக்கு தாட்கோ மூலம் கடன் வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய குடியரசுக் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவா் இருவேல்பட்டு அ.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் எஸ்.ஆா்.முருகன், துணைத் தலைவா் எம்.ஆா்.பாண்டியன், மாவட்ட ஓவியரணித் தலைவா் கிறிஸ்டோ, தொழில்சங்கத் தலைவா் கே.மணிக்குமாா், இளைஞரணித் தலைவா் ஜெ.ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில பொதுச் செயலா் வா.பிரபு, இணை பொதுச் செயலா் க.மங்காபிள்ளை, பொருளாளா் சி.எஸ்.கெளரிசங்கா், மாநிலப் பொறுப்பாளா் ரா.அன்புவேந்தன், கொள்கை பரப்புச் செயலா் பி.தன்ராஜ், துணைத் தலைவா்கள் எஸ்.பி.பாலகிருஷ்ணன், ரமேஷ்குமாா், விழுப்புரம் நகரத் தலைவா் கா.சிலம்பரசன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...