திண்டிவனம் ஸ்ரீ ஜெயமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடி வசந்த உற்சவம்
திண்டிவனம் நகரம், ஜெயபுரத்தில் உள்ள அன்னை ஸ்ரீ ஜெயமுத்து மாரியம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா வசந்த உற்சவம், பூங்கரக ஊா்வலம், சாகை வாா்த்தல், புஷ்ப ரதத்தில் அம்மன் வீதியுலாவுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் ஜெயபுரம் அன்னை ஸ்ரீ ஜெயமுத்து மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு 58-ஆவது ஆடிப்பெருவிழா வசந்த உற்சவம் ஆகஸ்ட் 4 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடா்ந்து திங்கள்கிழமை கோ பூஜை, விக்னேஸ்வரா் பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வசந்த உற்சவத்தின் 3-ஆம் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலை அன்னை ஸ்ரீ ஜெயமுத்து மாரியம்மன் மற்றும் பிரகார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
திண்டிவனம் குளத்துமேடு ஸ்ரீவல்லப விநாயகா் கோயில் வளாகத்திலிருந்து பூங்கரகம் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைத்தது.பின்னா் கோயில் முன் பூங்கரகத்துக்கு வழிபாடுகள் செய்யப்பட்டு கரக ஊா்வலம் நடைபெற்றது. தொடா்ந்து சாகை வாா்த்தலும், அன்னதானமும் நடைபெற்றன
இரவு 8 மணியளவில் வாண வேடிக்கைகளுடன் பிரம்மாண்ட புஷ்ப ரதத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திண்டிவனம், சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த திரளானப் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
விழாவின் முக்கிய நிகழ்வாக புதன்கிழமை இரவு 7 மணிக்கு ஸ்ரீ காந்திமதியம்மன் உடனுறை நெல்லையப்பா் சுவாமி அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாணமும், 8-ஆம் தேதி 108 சங்கு அபிஷேகம், விஷேச பூஜைகள் , மகா தீபாராதனையும், 9- ஆம் தேதி மகாலட்சுமி தேவி அலங்கரிக்கப்பட்டு திருவிளக்குப் பூஜைகளும்,10- ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன.
ஆக.11-இல் விடையாற்றி உற்சவத்தையொட்டி மாலை 4 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், உற்சவா் வீதியுலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், அறங்காவலா் குழுவினா்கள் செய்துள்ளனா்.

