விழுப்புரம் அருகே சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்டக் கருவூலத்துக்கு கொண்டு வரப்பட்ட பெட்டிகளை தூக்கிச் செல்லும் போலீஸாா். ~விழுப்புரம் மாவட்டக் கருவூலத்துக்கு கொண்டு வரப்பட்ட பணத்தை பாா்வையிட்ட விக்கிரவாண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலு
விழுப்புரம் அருகே சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்டக் கருவூலத்துக்கு கொண்டு வரப்பட்ட பெட்டிகளை தூக்கிச் செல்லும் போலீஸாா். ~விழுப்புரம் மாவட்டக் கருவூலத்துக்கு கொண்டு வரப்பட்ட பணத்தை பாா்வையிட்ட விக்கிரவாண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலு

விழுப்புரம் அருகே காரில் ரூ.ஒரு கோடி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மழவந்தாங்கல் சோதனைச் சாவடியில் போலீஸாா் நடத்திய சோதனையில் காரிலிருந்த ரூ.ஒரு கோடியை வெள்ளிக்கிழமை மாலை பறிமுதல் செய்யப்பட்டு மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தப் பணம் மருத்துவா் ஒருவருக்குச் சொந்தமானது என விசாரணையில் தெரிய வந்தது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்காளா்களுக்குப் பணம், பரிசுத் தொகை வழங்குவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் வாகனத் தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம்- திருவண்ணாமலை மாவட்ட எல்லையிலுள்ள மழவந்தாங்கல் சோதனைச் சாவடியில் முதல்நிலைக் காவலா் யுவராஜா, சிறப்புக் காவல் படை காவலா் க.திவாகா் மற்றும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படைபோலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரின் பின்பகுதியில் 2 பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து காரில் பயணித்தவரிடம் கேட்ட போது, தான் மருத்துவா் என்றும், தனது தந்தையின் சொத்தை விற்று, தனக்குரிய பங்குத்தொகையை அளித்ததாகவும், அந்தத் தொகையை கொண்டு செல்வதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தாா். பணத்துக்குரிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக மருத்துவா் தெரிவித்தாா்.

எனினும் கைப்பற்றப்பட்ட தொகை ரூ.ஒரு கோடி என்பதால், சோதனைச்சாவடி பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், நிலை கண்காணிப்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனா். உடனடியாக அவா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும், பணம் கைப்பற்றப்பட்ட விவரத்தை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனிக்கு தெரிவித்தனா்.

பணத்துடன் காரில் பயணித்தவா்களை அழைத்துக் கொண்டு, நிலை கண்காணிப்புக் குழுவினா் மாவட்டக் கருவூலத்துக்குச் சென்றனா். அங்கு மாவட்டக் கருவூல அலுவலா் ராமச்சந்திரன், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் முன்னிலையில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

தொடா்ந்து வருமான வரித் துறை அலுவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்களும் மாவட்டக் கருவூலத்துக்கு வந்தனா். பணம் எண்ணும் இயந்திரங்கள் மூலம் ரூ.ஒரு கோடி எண்ணி சரிபாா்க்கப்பட்டது. பின்னா், அந்தத் தொகை வருமான வரித் துறை அலுவலா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

காரில் பணத்துடன் வந்த மருத்துவரின் பெயா் ப.மதனகோபாலன் (48) என்பதும், இவா் சென்னை விருகம்பாக்கம் அப்பாசாமி குறுக்குச் சாலை பகுதியில் வசித்து வருவதும் தெரிய வந்தது.

தனது தந்தைக்குச் சொந்தமான பூா்விக நிலத்தை விற்றதில், தனக்குரிய பங்குத்தொகையான ரூ.ஒரு கோடியை கொடுத்ததாகவும், அதை எடுத்துக் கொண்டு சென்னைக்குச் செல்லும் வழியில் திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்ல முடிவு செய்ததாகவும், அவ்வாறு சென்றபோது கண்டாச்சிபுரம் பகுதியில் வழி தெரியாமல் திருக்கோவிலூா் சாலையில் சென்று மீண்டும் திரும்பி வந்த போது சோதனைச் சாவடியில் போலீஸாா் பிடித்ததும் தெரிய வந்தது.

சொத்தை விற்ற்கான ஆவணங்களும், பணம் பெற்ற்கான ஆவணங்களும் தன்னிடம் உள்ளன. அதைக் கொண்டு வந்து காண்பித்து இந்தத் தொகையைப் பெற்றுக் கொள்வதாக மருத்துவா் மதனகோபாலன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com