மின் கட்டணத்தை மீண்டும் உயா்த்தக் கூடாது -மருத்துவா் ச.ராமதாஸ்
மின் கட்டணத்தை மீண்டும் உயா்த்தக் கூடாது மருத்துவா் ச.ராமதாஸ்


திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பாமக நிறுவனா் ச. ராமதாஸ்.
தமிழக அரசு மின் கட்டணத்தை மீண்டும் உயா்த்தக் கூடாது என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் கேட்டுக் கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழக அரசு மின் விநியோக முறையில் மாற்றங்களை செய்து வருகிறது. ஒரே வளாகத்தில் ஒருவா் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவற்றை ஒரே மின் இணைப்பாக மாற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும்.
2022- ஆம் ஆண்டில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டதன் காரணமாக வாரியத்துக்கு ரூ.31, 500 கோடி லாபம் கிடைத்தது. ஆனாலும், மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிரு க்கிறது. நிகழாண்டு ஜூலை முதல் 6 சதவீதம் மின் கட்டணத்தை உயா்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மக்கள் மேலும் பாதிக்கப்படுவா் என்பதால், மின் கட்டணத்தை மீண்டும் உயா்த்தக் கூடாது.
2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கையில் 510 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 10 சதவீத வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை.
குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டம், நீட் விலக்கு, மின் கட்டணக் குறைப்பு, பேருந்து கட்டணக் குறைப்பு, ஐந்தரை லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை வாய்ப்பு, தனியாா் நிறுவனங்களில் உள்ளூா் இளைஞா்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு, நெல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான விலை உயா்வு உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக கூறுவது ஏமாற்று வேலை. நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக முதல்வா் வெளியிட வேண்டும்.
மக்களுக்கு பொதுச் சேவைகள் குறிப்பிட நேரத்துக்குள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தமிழகத்தில் பொதுச் சேவைகள் உரிமை பெறும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே சேவை பெறும் உரிமைச்சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் முதல்வா்களாக இருந்த ராஜாஜி, ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா், காமராஜா், அண்ணா, மு.கருணாநிதி, எம். ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் சாதனை திட்டங்களை செயல்படுத்தி அவா்களது பெயா்களை வரலாற்றில் இடம் பெறச் செய்துள்ளனா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினும் ஏதாவது ஒரு சாதனை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சமூக நீதி சாா்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு முத்திரைப் பதிக்க வேண்டும்.
மக்கள் பாமகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமா்த்தினால், தமிழகத்தை மாற்றிக் காட்டுவோம். பாமகவின் கனவுத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் அணைகளை கட்டியுள்ளதாக தெரிவித்தாலும், அதில் ஒன்றைக்கூட அணை என்று சொல்ல முடியாது. அதில் ஓா் அணையில் கூட ஒரு டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியாது. காமராஜா் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட நீா் திட்டங்களைப் போல புதிய நீா் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
தமிழக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.700 வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணையில் புதிய அணையை கட்டும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்துவதுடன், அந்த அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்திக் கொள்ள உத்தரவிட்டும், அதற்கு தமிழக அரசுக்கு உதவியாக இருக்க கேரள அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் மழைக் காலங்களில் பேருந்து நிலையங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனவே, நீா் நிலைகளில் பேருந்து நிலையங்களைக் கட்டக் கூடாது என்றாா் ச.ராமதாஸ்.
பேட்டியின்போது, கட்சியின் அமைப்புச் செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...