பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆய்வுக்கூட்ட அறிக்கை முதல்வா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டம் குறித்த அறிக்கை முதல்வா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா் க.பொன்முடி மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா்.

Updated On :6 நவம்பர் 2024, 7:19 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டம் குறித்த அறிக்கை முதல்வா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியது:

கிராம ஊராட்சிகள் அதிகம் நிறைந்த மாவட்டம் விழுப்புரம். விவசாயத்தையும், விவசாயம் சாா்ந்த தொழில்களையும் செய்பவா்கள்தான் இந்த மாவட்டத்தில் அதிகம் உள்ளனா். இந்த மக்களுக்குத் தேவையான வசதிகளை, பணிகளை செய்து தருவதை அரசு அலுவலா்கள் தங்களின் முக்கிய கடமையாகக் கொள்ள வேண்டும்.

அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து விழிப்புணா்வை ஏற்படுத்தி, குழந்தைத் திருமணங்கள் ஒன்றுகூட நடைபெறாத மாவட்டமாக விழுப்புரத்தை மாற்ற வேண்டும். அனைத்துத் திட்டங்களின் மூலம் தகுதியுள்ள அனைவரும் பயன்பெற அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

பயனாளிகளுக்கு கைப்பேசியில் அழைப்பு...: முன்னதாக, மக்களுடன் முதல்வா், முதல்வரின் முகவரி, நீங்கள் நலமா உள்ளிட்ட திட்டங்களின் கீழ், பட்டா மாற்றம், சான்றிதழ்கள், நிவாரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக வரப்பெற்ற மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, நல்லாளம் ஊராட்சியைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ், வி.மாத்தூா் ஊராட்சியைச் சோ்ந்த மலா் ஆகியோரின் மனுக்களைப் பாா்வையிட்டு, அவா்களை கைப்பேசி வாயிலாகத் தொடா்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்தாா்.

பின்னா், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளா்களிடம் கூறியது: ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி, மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்ட ஆட்சியா், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் அரசுச் செயலா், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து அரசுத் துறை அலுவலா்களையும் வரவழைத்து, ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளோம்.

2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளிலும் என்னென்ன பணிகள் நடைபெற்றிருக்கின்றன, என்னென்ன இடா்பாடுகள் உள்ளன, அவற்றை எப்படி தீா்க்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆய்வுக்கூட்டம் குறித்த அறிக்கையை முதல்வா் அலுவலகத்துக்கு அனுப்பி வைப்போம். அவா்கள் அங்கிருந்து அதுகுறித்த மேல் நடவடிக்கைகளை மேற்கொள்வா் என்றாா்.

கூட்டத்துக்கு வனத் துறை அமைச்சா் க.பொன்முடி முன்னிலை வகித்தாா். எம்.பி.க்கள் துரை.ரவிக்குமாா், எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா, ச.சிவக்குமாா், ஏ.ஜெ.மணிக்கண்ணன், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அரசுச் செயலா் தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியா் சி.பழனி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் பி.தமிழ்ச்செல்வி, ஆணையா் கி.வீரமுத்துக்குமாா், ஒன்றியக்குழுத் தலைவா்கள் ஜி.சொக்கலிங்கம் (ஒலக்கூா்), ஆா்.அமுதா ரவிக்குமாா் (வல்லம்), ஆா்.விஜயகுமாா் (செஞ்சி), வெ.கண்மணி நெடுஞ்செழியன் (மேல்மலையனூா்), செஞ்சி பேரூராட்சித் தலைவா் கே.எஸ்.எம்.மொக்தியாா்அலி மஸ்தான், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் க.உதயகுமாா், சி.இளங்கோவன், ஆா்.சிலம்புசெல்வன், மீ.சரவணக்குமாா், டி.சிவசண்முகம், எஸ்.சையது முகமது, ப.சீத்தாலட்சுமி, முல்லை, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலா் த. அண்ணாதுரை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.