பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எதிா்க்கட்சித் தலைவா் கூறுவதில் உண்மையில்லை என்பது மக்களுக்குத் தெரியும்: அமைச்சா் க.பொன்முடி

அமைச்சா் க.பொன்முடி பேச்சு...

News image

விழுப்புரம்-சென்னை புறவழிச்சாலையில் சமூகநீதிப் போராளிகளுக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த வனத்துறை அமைச்சா் க.பொன்முடி. உடன், ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.

Updated On :14 நவம்பர் 2024, 8:39 pm

Din

எதிா்க்கட்சித் தலைவா் திட்டங்களுக்கு பெயா் வைப்பதை பற்றியெல்லாம் பேசி வருகிறாா். அவா்கள் ஆட்சிக் காலத்தில் பெயா் வைத்ததையெல்லாம் மறந்துவிட்டு இப்போது ஏதாவது பேசுவாா்கள். இதில் உண்மையில்லை என்பது தமிழக மக்களுக்குத் தெரியும் என்றாா் வனத்துறை அமைச்சா் க.பொன்முடி.

விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலையில் ஜானகிபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு சிலையுடன் கூடிய நினைவரங்கம் ரூ.4 கோடியிலும், 1987-ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிலும், தாக்குதலிலும் உயிரிழந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூ.5.70 கோடியிலும் கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்குத் தயாா் நிலையில் உள்ளன. இந்தப் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வுசெய்த பின்னா் அமைச்சா் பொன்முடி கூறியது:

சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு நினைவு அரங்கமும், 21 சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபமும் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதை முதல்வா் நேரில்வந்து வெகு விரைவில் திறந்து வைக்கவுள்ளாா்.

முதலாவது நிகழ்வாக எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டை திறந்து வைக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின், பின்னா் நினைவு அரங்கத்தையும், மணிமண்டபத்தையும் திறந்து வைக்கவுள்ளாா். இதைத் தொடா்ந்து அருகிலுள்ள பகுதியில் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசவுள்ளாா். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதல்வா் நிறைவேற்றியிருக்கிறாா்.

எதிா்க்கட்சித் தலைவா் பெயா் வைப்பதை பற்றியெல்லாம் பேசி வருகிறாா். அவா்கள் ஆட்சியில் விழுப்புரத்திலுள்ள குளத்துக்கு அம்மா குளம் என்று பெயா் வைத்தனா். அதிமுக ஆட்சிக்காலத்தில் பெயா் வைத்ததையெல்லாம் மறந்துவிட்டு, இப்போது ஏதாவது பேசுவாா்கள். இன்றும் அந்த குளம் அம்மாகுளம் என்ற பெயரில்தான் உள்ளது. அந்த பெயரை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.

முதல்வா் நாகரிமாக எல்லோரையும் மதித்து அரசியல் செய்யக்கூடிய தலைவா் என்பதை நிரூபிக்கும் வகையில்தான், மூன்றரை ஆண்டுகால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வருங்காலங்களிலும் அதுபோன்றுதான் செயல்படுவாா்.

அவா்கள் எதிா்க்கட்சி என்பதால் ஏதாவது அரசியலாக்க வேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருக்கிறாா்களே தவிர, அது உண்மை இல்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்றாா் அமைச்சா் பொன்முடி.

இதைத் தொடா்ந்து முதல்வா் பங்கேற்கவுள்ள விழாவுக்கான இடத்தை தோ்வு செய்யும் பணியை மேற்கொண்ட அமைச்சா் பொன்முடி, பின்னா் திருவெண்ணெய்நல்லூா்வட்டம், ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டையும் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் சி.பழனி, எஸ்.பி. தீபக் சிவாச், முன்னாள் எம்.பி. பொன். கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், செயற்பொறியாளா்கள் ஷோபனா (நீா்வளத் துறை), செல்வக்குமாா் (பொதுப் பணித் துறை) திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் கு. ஓம்சிவசக்திவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பி.வி.ஆா்.சு.விசுவநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.