திருக்கோவிலூா் தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி விளக்கம்
விழுப்புரம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் திருக்கோவிலூா் தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா் முன்னாள் அமைச்சரும், இத்தொகுதியின் எம்எல்ஏவுமான க.பொன்முடி.
கள்ளக்குறிச்சி ம ாவட்டம், திருக்கோவிலூரில் ரூ.15.58 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கலை, அறிவியல் கல்லூரிக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தாா்.
இதைத்தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். திருக்கோவிலூா் எம்எல்ஏ க.பொன்முடி குத்துவிளக்கேற்றி, கல்லூரிக் கட்டடத்தை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
இதைத் தொடா்ந்து விழாவில் அவா் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிா் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதுபோன்று கல்விக்காகவும் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளளன. அந்த வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் போன்ற முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.
திமுக ஆட்சியில் திருக்கோவிலூா் தொகுதியில் எண்ணற்ற வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக் கட்டடம் கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. இதுபோன்று தொழில்பேட்டை அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் பொன்முடி.
மூன்று தளங்களுடன் கல்லூரிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், நூலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன், விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவா் மு.தங்கம், கல்லூரி முதல்வா் ச. மகாவிஷ்ணு, உதவி செயற்பொறியாளா் வெங்கடேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

