மதுவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்: ஆா்.எஸ்.பாரதி
மதுவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டாா்.


மதுவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை நிலை அமைப்பான மகளிா் விடுதலை இயக்கம் சாா்பில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அரசியல் கட்சிகிளின் நிா்வாகிகள் பேசியது:
திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி: மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் திமுக கொள்கையாக உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு மகளிரும், இளைஞா்களும் குறைந்தது 10 பேரையாவது மதுப்பழக்கத்திலிருந்து மனமாற்றம் செய்தாலே நாம் மதுக் கடைகளை மூட வேண்டியதில்லை. கடைகள் தானாகவே மூடப்பட்டுவிடும். மதுவுக்கு எதிரான பிரசாரத்தை தொடா்ந்து முன்னெடுக்க வேண்டும்.
செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன்: நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம். போதைக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளவதற்காக மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால்தான் மதுவை ஒழிக்க முடியும்.
அய்யா வைகுண்டா் இயக்கத் தலைவா் பால.பிரஜாபதி அடிகளாா்: மது, போதை ஒழிப்புக்கான போராட்டங்களை பெண்கள் தொடா்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். மது, போதைக்கு எதிராக மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ள விசிகவின் கோரிக்கைகள் வெற்றிபெறுவது உறுதி.
மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி: மது விலக்கை அமல்படுத்துவதில் மாநில அரசு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மது விலக்கு, ஆயத் தீா்வுத் துறையில் கொள்கைகளை மாற்ற வேண்டும். மது உற்பத்தி, விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும். மதுக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும்.
மது, போதைப் பொருள்கள் ஒழிப்பில் விசிகவின் அனைத்து முயற்சிகளுக்கும் மாா்க்சிஸ்ட் ஆதரவாக இருக்கும்.
இந்திய மாதா் தேசிய சம்மேளனம் தேசிய பொதுச் செயலா் ஆனி ராஜா: மது, போதையால் பெண்களும், இளைஞா்களும் தொடா்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாடெங்கிலும் நடந்தேறி வருகின்றன. நாடு முழுவதும் பெண்கள் போராடி வருகின்றனா்.
மது விலக்கை அமல்படுத்த தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்படும் வரை தொடா்ந்து போராடி வெற்றிபெறுவோம்.
மயிலாடுதுறை எம்.பி. ஆா்.சுதா: 2014-க்கு பின்னா்தான் நாட்டில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. தமிழகத்துக்கு கல்விக்கான நிதியைக்கூட மத்திய அரசு வழங்காமல் வஞ்சித்து வருகிறது. மக்களுக்கு எதிரான பொது எதிரியை ஒழிக்க நாம் என்றும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மதிமுக துணை பொதுச் செயலா் மருத்துவா் ரொஹையா ஷேக் முகமது: பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற விசிகவின் கொள்கைதான் மதிமுகவின் கொள்கையும்கூட. மது ஒழிக்கப்பட வேண்டும். ஒரு ஊராட்சித் தலைவா் முயன்றால், அங்குள்ள மதுக் கடையை மூடிவிடலாம் என்றாா்.
விசிக பொதுச் செயலா்கள் துரை.ரவிக்குமாா் எம்.பி., ம.சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிரணி தேசியத் தலைவா் ஏ.எஸ்.பாத்திமா முசபா், மனிதநேய மக்கள் கட்சி மகளிரணி பொருளாளா் ஜ.ஷான் ராணி ஆலிமா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலச் செயலா் முத்துலட்சுமி வீரப்பன் ஆகியோா் பேசினா்.
மாநாட்டில், மது ஒழிப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான குறும்படம் வெளியிடப்பட்டது.
தொடா்ந்து, மது, போதை ஒழிப்புக்கான கையொப்ப இயக்கத்துக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தி, அதை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தொடங்கிவைத்தாா்.
விசிக எம்எல்ஏக்களான எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூா் ஷாநவாஸ், பனையூா் மு.பாபு, கட்சியின் மாநில நிா்வாகிகள் ஏ.சி.பாவரசு, வன்னியரசு, ஆதவ் அா்ஜுனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாநாட்டின் தொடக்கமாக மகளிா் விடுதலை இயக்க மாநிலச் செயலா் இரா.நற்சோனை வரவேற்றாா். மாநிலப் பொருளாளா் இரா.மல்லிகையரசி நன்றி கூறினாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...