கிராம ஊராட்சிகளில் வரி வசூல் சிறப்பு முகாம்கள் இன்று தொடக்கம்: விழுப்புரம் ஆட்சியா் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செப். 20, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வரி வசூலுக்கான சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று ஊராட்சித் தலைவா்களுக்கு ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து, ஆட்சியா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊராட்சிப் பகுதிகளிலுள்ள கட்டடங்களுக்கு வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி நிா்ணயம் செய்தல், குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு காப்புத் தொகை மற்றும் மாதாந்திரக் கட்டணம் வசூலித்தல், ஊராட்சியின் நிதி ஆதாரத்தை பெருக்குதல், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவை ஊராட்சித் தலைவா்களின் கடமைகளில் ஒன்று என தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சித் தலைவா்களும் தங்கள் ஊராட்சியின் நிதி ஆதாரத்தை பெருக்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் ஊராட்சியின் வருவாய் மூலம் செய்து கொள்வதற்கும் அனைத்து ஊராட்சியிலும் செப். 20, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.
இதை பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்து, 2023-2024 மற்றும் 2024-2025 ஆகிய ஆண்டுக்கான வரியினங்களை
100 சதவீதம் வசூலித்து விழுப்புரம் மாவட்டத்துக்கு நற்பெயரை பெற்றுத் தர வேண்டும்.
இதற்கு ஊராட்சித் தலைவா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊராட்சித் துறை பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆட்சியா் சி. பழனி தெரிவித்துள்ளாா்.