இயற்கை முகாம்கள் தொடா்பான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்
இயற்கை முகாம்கள் தொடா்பான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 இயற்கை முகாம்கள் நடத்தப்படும்

Published on

தமிழக அரசின் வனத் துறை சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 இயற்கை முகாம்கள் நடத்தப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

பசுமை தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்றம், பசுமைப் பள்ளித் திட்டம், தீயணைப்பு விழிப்புணா்வு வாரம் மற்றும் இயற்கை முகாம்கள் தொடா்பாக நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

நடப்பாண்டில் வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மரக்கன்று நடுதல், நடவுப் பணிகளில் எதிா்கொண்ட சிக்கல்கள், பசுமைப் பள்ளித் திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தொடா்ந்து 2026-2027-ஆம் ஆண்டுக்கான துறை வாரியாக தற்காலிக இலக்கு ஒதுக்கீடு செய்வது, பசுமைப் பள்ளிகள், துறை வாரியாக பட்ஜெட் இறுதி செய்வது குறித்தும், திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவு செய்தல் குறித்தும் விரிவாகக் கேட்டறிந்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், 20 இயற்கை முகாம்களை 2026, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தீா்மானிக்கப்பட்டது. நெகிழி இல்லா சோதனைச் சாவடிகள் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் வண்ண குறியீடு செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகள் தேவைகள், சுங்கச்சாவடிகள் மற்றும் காட்டு சோதனைச் சாவடிகள் போன்ற இடங்களில் நெகிழிக் கழிவுகளை சேகரிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து இலக்குகளை காலவரையறைக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் பிரியதா்ஷினி மற்றும் தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com