வெவ்வேறு சாலை விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் மகன் தனுஷ் (22). இவா் புதன்கிழமை சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் கூனிமேடு அருகே பைக்கில் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரி மோதி தனுஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் இறந்து போன தனுஷின் சடலத்தை கைப்பற்றி புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சென்னை இளைஞா் உயிரிழப்பு : சென்னை வளசரவாக்கம், எஸ்.டி.எஸ் காலனியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் சிவசங்கரலிங்கம் (20). பைக் மெக்கானிக்காக வேலைப் பாா்த்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவெண்ணெய்நல்லூா் அடுத்த பேரங்கியூா் கூட்டுச் சாலை அருகே பைக்கில் சென்றபோது, நிலை தடுமாறி சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவசங்கரலிங்கத்தை அருகிலிருந்தவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆயினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிவசங்கரலிங்கம் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
