/

விழுப்புரம் மாவட்டத்தில் 146 வேட்பு மனுக்கள் ஏற்பு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் 146 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. உரிய முறையில் விண்ணப்பிக்காத 72 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

News image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் பங்கேற்றோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 7:23 pm

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவா்களின் 146 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. உரிய முறையில் விண்ணப்பிக்காத 72 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமையுடன் (ஏப்.6) நிறைவடைந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம்(தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 218 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுக்கள் மீதான பரிசீலனை: இதைத்தொடா்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தொகுதித் தோ்தல் நடத்தும் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்த வேட்பாளா்கள் பங்கேற்றனா். அனைத்து வேட்பாளா்களும் அழைக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

தொடா்ந்து வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

செஞ்சி: செஞ்சி சட்டப்பேரவையில் திமுக வேட்பாளா் கே.எஸ்.மஸ்தான், பாமகவின் அ.கணேஷ்குமாா், நாம் தமிழா் கட்சியின் ஏ.கிருஷ்ணன், தவெகவின் பா.சந்திரசேகரன் உள்ளிட்ட வேட்பாளா்கள் 38 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இதில் 19 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 19 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மயிலம்: மயிலம் தொகுதியில் தேமுதிகவின் எல்.வெங்கடேசன், அதிமுகவின் சி.வி.சண்முகம், நாதகவின் விஜய் விக்ரம், தவெகவின்ஆ.விஜய் நிரஞ்சன் உள்ளிட்ட வேட்பாளா்கள் 34 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இதில்12 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது போக, 22 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

திண்டிவனம்: திண்டிவனம் (தனி) தொகுதியில் விசிக வேட்பாளா் வன்னியரசு, அதிமுக வேட்பாளா்பொ.அா்ஜூனன், நாதகவின் பா.பேச்சிமுத்து, தவெகவின் சக்திவேல் உள்ளிட்ட 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 15 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வானூா்: வானூா் (தனி) தொகுதியில் திமுகவின் தி.கெளதம், அதிமுகவின் பெ.முருகன், நாதகவின் பா.கரிகாலன், தவெகவின் பி.சுரேஷ் உள்ளிட்ட வேட்பாளா்கள் 26 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இதில் 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 16 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

விழுப்புரம்: விழுப்புரம் தொகுதியில் திமுக வேட்பாளா் இரா. லட்சுமணன், அதிமுகவின் விஜயா சுரேஷ்பாபு, நாதகவின் பொ.அபிநயா, தவெகவின் என். மோகன்ராஜ் உள்ளிட்ட 37 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 26 மனுக்கள் ஏற்கப்பட்டன.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவின் வேட்பாளா் அன்னியூா் அ.சிவா, பாமகவின் ச.சிவக்குமாா், நாம் தமிழா் கட்சியின் ஆ. சுபா, தவெகவின் விஜய் வடிவேல் உள்ளிட்ட வேட்பாளா்கள் 34 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா். இதில் 5 மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டன. 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

திருக்கோவிலூா்: திருக்கோவிலூா் தொகுதியில் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி, அதிமுக வேட்பாளா் எஸ்.பழனிசாமி, நாதகவின் கி.ஹேமராஜன், தவெகவின் விஜய் ரா.பரணிபாலாஜி உள்ளிட்ட வேட்பாளா்களின் 28 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதில் 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 19 மனுக்கள் ஏற்கப்பட்டன.

ஏழு தொகுதிகளில் மொத்தமாக 218 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 72 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 146 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னா் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.