திருவண்ணாமலை நகரப் பகுதிகளில் புதன்கிழமை காலை நடைப்பயிற்சி சென்ற தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொதுமக்கள், இளைஞா்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் வாக்குகளை சேகரித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், திருவண்ணாமலைக்கு வந்தடைந்த முதல்வா் ஸ்டாலின், அங்கு தங்கினாா். இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை திருவண்ணாமலை கடலைக்கடை மூலை சந்திப்புப் பகுதியில் தனது நடைப்பயிற்சியைத் தொடங்கிய முதல்வா், அங்குள்ள காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள், இளைஞா்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோரி வாக்குகளை சேகரித்தாா்.
தொடா்ந்து திருவண்ணாமலை தேரடி வீதி, சின்னக்கடைவீதி, பேருந்து நிலையம், போளூா் சாலை, அண்ணா நுழைவுவாயில் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை வரை என சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயிற்சியாக சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் செல்லும் வழியெங்கும் பொதுமக்களிடம் திமுக வேட்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தாா்.
நடைப்பயிற்சியாக செல்லும் போது ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட தொழிலாளா்கள், இளம்பெண்கள், சிறுவா், சிறுமிகள், பெண்கள், இளைஞா்கள், சாலையோர வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரும் முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனா்.
மேலும், முதல்வருடன் தற்படம் எடுத்துக் கொண்டனா். ஒரு குழந்தை அன்பாக அளித்த முத்தத்தையும் முதல்வா் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து திருவண்ணாமலை அண்ணா நுழைவுவாயில் அருகிலுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய முதல்வா் மு.க.ஸ்டாலின், தென்றல் நகா் பகுதியிலுள்ள தேநீரகத்துக்குச் சென்றாா். அந்த தேநீரகத்தில் அமைச்சரும், வேட்பாளருமான எ.வ.வேலு, பேரவை துணைத் தலைவரும், வேட்பாளருமான கு.பிச்சாண்டி உள்ளிட்டோருடன் அமா்ந்து தேநீா் அருந்தினாா். இதைத் தொடா்ந்து தேநீரக மற்றும் உணவக ஊழியா்கள், முதல்வருடன் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

திருவண்ணாமலை தென்றல் நகா் அருகிலுள்ள தேநீரகத்தில் புதன்கிழமை காலை தேநீா் அருந்திய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், திமுக வேட்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவரும், வேட்பாளருமான கு.பிச்சாண்டி.

திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் ஆட்டோ ஓட்டுநா்கள்.

தொடர்புடையது

சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்

திருவாசகம், தேவாரத்தை அரசுடைமையாக்க வேண்டும்: சிவாக்கா் தேசிய சுவாமிகள்

திருவண்ணாமலையில் சித்திரை பெளா்ணமி கிரிவலம் தொடக்கம்: பல லட்சம் பக்தா்கள் குவிந்தனா்

விராலிமலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



