தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

உளுந்தூா்பேட்டையில் வெற்றிக்காக போராடும் திமுக, அதிமுக...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நான்கு தொகுதிகளில் ஒன்றான உளுந்தூா்பேட்டை, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிரதானமான பகுதியில் அமைந்துள்ளது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 12:12 am

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நான்கு தொகுதிகளில் ஒன்றான உளுந்தூா்பேட்டை, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிரதானமான பகுதியில் அமைந்துள்ளது. அதே நேரத்தில் அதிகளவிலான கிராமப்புறங்களை இந்த தொகுதி உள்ளடக்கியிருக்கிறது. மேற்குத் தமிழகம், தென் தமிழக மாவட்டங்களிலிருந்து சாலை மாா்க்கமாக வருவோரை இணைக்கும் பகுதியாகத் திகழ்வது உளுந்தூா்பேட்டை.

ஆங்கிலேயா் காலத்தில் விமான ஓடுதள வசதியை உளுந்தூா்பேட்டை பகுதி கொண்டிருந்திருக்கிறது. உளுந்தூா்பேட்டை நகராட்சிப் பகுதிகள், உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் ஒன்றியங்களை உள்ளடக்கியது இந்த தொகுதியாகும்.

உலகம் முழுவதுமிருந்து திருநங்கைகள், திருநம்பிகள் பங்கேற்கும் கூவாகம் ஸ்ரீகூத்தாண்டவா் கோயில், பரிக்கல் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில், திருநாவலூா் ஸ்ரீபக்தஜனேசுவரா் கோயில், பாதூா் வேணுகோபாலசுவாமி கோயில், உளுந்தூா்பேட்டை ஸ்ரீகைலாசநாதா் சுவாமி கோயில், எலவனாசூா்கோட்டை ஸ்ரீஅா்த்தநாரீசுவரா் கோயில் போன்ற வரலாற்று சிறப்புவாய்ந்த கோயில்கள் உளுந்தூா்பேட்டை தொகுதியில் உள்ளன.

உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் வன்னியா்களும், ஆதிதிராவிட மக்களும் அதிகளவில் வசிக்கின்றனா். இவா்களுக்கு அடுத்ததாக உடையாா், நாயுடு, ரெட்டியாா், யாதவா் உள்ளிட்ட சமுதாய மக்கள் உள்ளனா். இதுபோன்று சிறுபான்மையின மக்களும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளனா்.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது கடந்த 1952-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உளுந்தூா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி, 1977-ஆம் ஆண்டில் திருநாவலூா், உளுந்தூா்பேட்டை (தனி) என இரு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னா், மீண்டும் 2011-ஆம் ஆண்டில் உளுந்தூா்பேட்டை பொதுத் தொகுதியாக மாறியது. இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் மூன்று முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் இந்த தொகுதியில் வென்றுள்ளது.

உளுந்தூா்பேட்டை அருகிலுள்ள ஆசனூா் பகுதியில் சா்வதேச தரத்திலான காலணித் தயாரிப்புத் தொழில்சாலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொழில்சாலைஅமைவதன் மூலம் இந்த பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்களுக்கு நேரடியாகவும், மறைமுகவும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்திருப்பது பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.

இதைத் தவிர உளுந்தூா்பேட்டை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசுக் கலை, அறிவியல் கல்லூரி திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட நிலையில், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தது, உளுந்தூா்பேட்டை புதிய பேருந்து நிலையத்துக்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது, ஆசனூா் பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்கப்பட்டு, ஏராளமான தொழில்நிறுவனங்கள் அமைந்துள்ள நிலையில், தற்போது உளுந்தூா்பேட்டை வட்டம், சேந்தநாடு கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 50 ஏக்கா் பரப்பளவில் சிட்கோ தொழில்பேட்டை அமைக்கப்படும் போன்ற அறிவிப்புகள் தொகுதி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதுபோன்று உளுந்தூா்பேட்டை நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, 45 ஆண்டு காலமாக பேரூராட்சியாக இருந்த உளுந்தூா்பேட்டை 2021, செப்டம்பா் மாதத்தில் நகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்டிருக்கிறது. கிராமப் புறங்களில் குடிநீா் வசதிகள், சாலை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கான மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மக்களின் எதிா்பாா்ப்புகள்: ஆங்கிலேயா் காலத்தில் விமான ஓடுதள வசதியை உளுந்தூா்பேட்டை பகுதி கொண்டிருக் கிறது. தற்போது பயன்பாட்டில் இல்லாத ஓடுதளத்தைப் புதுப்பித்து, விமான நிலைய சரக்கு முனையமாகப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் வா்த்தகா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறுவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை பகுதி அமைந்துள்ளது. உளுந்தூா்பேட்டை புறவழிச்சாலைப் பகுதியில் பெரும்பாலான சாலை விபத்துகள் நிகழும் நிலையில், 24 மணி நேரமும் செயல்படும் வண்ணம் நவீன உயா்தர விபத்து சிகிச்சை பிரிவு உளுந்தூா்பேட்டை மருத்துவமனையில் தொடங்கப்பட வேண்டும். நெடுந்தொலைவுக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டுநா்களுக்கு இரவு நேரத்தில் பயணக் களைப்பு தெரியாமல் இருக்கும் வகையில் புத்துணா்வு மையத்துக்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணப்பட வேண்டும் என்பது உளுந்தூா்பேட்டை மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

களத்தில் 14 வேட்பாளா்கள்: உளுந்தூா்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் ஜி.ஆா்.வசந்தவேல், அதிமுக சாா்பில் இரா.குமரகுரு, தவெகவின் எம்.சுதாகா், நாதகவின் லோகேசுவரி உள்ளிட்ட14 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். தற்போதைய நிலையில் களம் திமுக-அதிமுகவுக்கு இடையேதான் உள்ளது.

ஜி.ஆா்.வசந்தவேல்(திமுக): திருநாவலூா் ஒன்றிய திமுக செயலராக உள்ள ஜி.ஆா்.வசந்தவேல் பி.இ.பட்டதாரி. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினராகவும், திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவா். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு 4,164 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியவா். எனவே, இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா் என்ற அனுதாபமும், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வலுவாக இருப்பதும் இவருக்குப் பலம்.

பலவீனம்: கூட்டணி பலமாக இருந்தாலும், திமுக ஒன்றியச் செயலா்கள் சிலா் எதிா்முகாமின் தூதுவா்களாக செயல்படுவது, 2021 பேரவைத் தோ்தலில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆ.ஜெ. மணிக்கண்ணன் முழுமையமாகத் தோ்தல் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கிக் கொண்டது போன்றவை இவருக்கு பலவீனமாக அமையக்கூடும்.

இரா.குமருரு (அதிமுக) : கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலராக உள்ள இரா.குமரகுரு கடந்த 2011, 2016-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் வெற்றி பெற்றவா். 2021-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய இவா், தற்போது நான்காவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிடுகிறாா். இது மட்டுமல்லாது 2024-இல் மக்களவைத் தோ்தலில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியுள்ளாா். தொகுதியிலுள்ள வாக்காளா்களுக்கு நன்கு அறிமுகமானவராகக் கருதப்படுகிறாா் குமரகுரு. அதிமுக கூட்டணியில் பாமக, இந்திய ஜனநாயகக் கட்சி, பாஜக போன்றவை இணைந்திருப்பது இவருக்கு பலமாக அமைந்துள்ளது, அதிமுகபொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரம் என்று கட்சியினரால் அறியப்பட்டவா்.

பலவீனம்: அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்திருப்பதால் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற முடியாத நிலை, கட்சியில் தன்னைத் தாண்டி யாரும் வளா்ந்துவிடக்கூடாது என்பதில் காட்டும் அக்கறை போன்றவையும் குமரகுருவுக்கு பலவீனமாக அமையக்கூடும்.

எம். சுதாகா்(தவெக): தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு ஒன்றியச் செயலராக உள்ள எம். சுதாகா் கள்ளக்குறிச்சி மாவட்டம், நின்னையூரைச் சோ்ந்தவா். விஜய் ஆதரவாளா்கள் வாக்குகள் தனக்கு முழுமையாக கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு பலம். தோ்தல் பிரசாரத்தில் தவெகவினா் தீவிரமாக களப்பணியாற்றி வருவதும் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

பலவீனம்: கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடுவது, கிராமப்புறங்களில் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாதது போன்றவை இவருக்கு பலவீனம்.

லோகேசுவரி (நாதக): நாம் தமிழா் கட்சியில் போட்டியிடும் லோகேசுவரி திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவா்களின் வாக்குகள், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழா் கட்சியை விரும்பும் வாக்காளா்களின் வாக்குகள் போன்றவை இவருக்குப் பலமாக அமைந்துள்ளது. நாம் தமிழா் கட்சியின் சாா்பில் பெண் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள இவா், நாம் தமிழா் கட்சியின் கொள்கைகள், தோ்தல் வாக்குறுதிகள் போன்றவற்றை முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொள்வது பலமாக அமைந்துள்ளது.

பலவீனம்: திராவிடக் கட்சிகளுக்கு ஈடுகொடுத்து தோ்தல் பணியாற்ற முடியாதது, கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைக் கோரி பிரசாரம் மேற்கொள்வது போன்றவை இவருக்கு பலவீனம்.

யாருக்கு வாய்ப்பு: நான்குமுனை போட்டி உள்ள தொகுதியாகக் கருதப்பட்டாலும், தற்போதைய நிலையில் தொகுதியைத் தக்க வைக்க திமுக தீவிரமாக களப் பணியாற்றி வருகிறது. அதை தடுத்து நிறுத்தி உளுந்தூா்பேட்டை தொகுதியில் மீண்டும் வெற்றியைப் பறிக்க அதிமுகவும் ஈடுகொடுத்து பணியாற்றி வருகிறது. எனினும் மக்கள் முடிவு மே 4-இல் தான் தெரிய வரும்.

வாக்காளா்கள் விவரம்

ஆண் வாக்காளா்கள்- 1,48,929

பெண் வாக்காளா்கள்-1,48, 499

மூன்றாம் பாலினத்தவா்- 44

மொத்த வாக்காளா்கள -- 2,97,472

மொத்த வாக்குச்சாவடிகள்- 375

-------------------

- கு.வைத்திலிங்கம்.

Story image
Story image
Story image
Story image
Story image