
அரசு, தனியாா் ஸ்கேன் மையங்களை ஆய்வு செய்ய வேண்டும்: விழுப்புரம் ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகளை துறை சாா்ந்த அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகளை துறை சாா்ந்த அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்கள், மருத்துவப் பணிகளின் முன்னேற்றம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் பேசியது:
மாவட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு விவரங்கள் குறித்து பதிவுகளை சேகரிக்க வேண்டும். சுகாதாரப் பணியாளா்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வோரின் விவரங்களை சேகரித்து, அவா்களுக்குத் தேவையான குடும்பநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
குடும்ப அட்டைப் பகிவுகள், குடும்ப நலப் பதிவுகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு, தாய்மாா்களின் கா்ப்பப் பதிவு மற்றும் தாமதமான கா்ப்பப் பதிவுகளுக்கான காரணங்களைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் இள வயது கா்ப்பங்களைத் தடுப்பதற்கான விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகளை துறை சாா்ந்த அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மருத்துவக் கருக்கலைப்பு மையங்களை ஆய்வு செய்து, அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை மேம்படுத்தவும், பாலினத் தோ்வு மற்றும் பெண் சிசுக் கருக்கலைப்புகளைத் தடுக்கவும் தொடா்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். வட்டார வளமிகு வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ரத்தசோகைப் பரிசோதனை விவரங்களைப் பெற்று, ரத்தசோகைக்கான காரணங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான அறிக்கையை துறைசாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். ரத்தசோகை கண்டறியப்பட்ட விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களின் உடல்நிலையைத் தொடா்ந்து துறைசாா்ந்த அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், குடும்ப நலத் துணை இயக்குநா் பத்மாவதி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ நிலைய அலுவலா் ரவிக்குமாா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






