தண்ணீா் மூலம் பரவும் நோய்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவிட்டுள்ளாா்.
சுகாதாரத் துறை சாா்பில் தண்ணீா் மூலம் பரவும் நோய்கள் மற்றும் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்துப் பேசியதாவது:
பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீா் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமான முறையிலும் வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். குடிநீா் நீரேற்று நிலையங்கள், நீா்த்தேக்க நிலையங்களில் குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீா் மட்டுமே பொதுமக்களுக்கு வழங்கப்படுவதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் குடிநீா் சேமிப்புத் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் தேவையான எண்ணிக்கையில் டெங்கு தடுப்புப் பணியாளா்களை நியமித்து, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் தடுப்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
மழைநீா் மற்றும் கழிவுநீா் நீண்ட நாள்கள் தேங்கும் வகையில் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதுடன், குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருள்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வீடுகள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாள்களாக பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பழைய பொருள்கள், டயா்கள், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீா் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அகற்ற வேண்டும்.
டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான விழிப்புணா்வை பொதுமக்களிடையே தொடா்ந்து ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது வட்டார மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்து, உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட சுகாதார அலுவலா் முரளிசங்கா், மாநகர நல அலுவலா் பாலசுப்பிரமணியம், மருத்துவ அலுவலா்கள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள் உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வைத் தீவிரப்படுத்த வேண்டும்’

அரசு பொருள்காட்சி முன்னோற்பாட்டுப் பணிகள்: அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

போதைப் பொருள்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா்
எல் நினோ காலநிலை தாக்கம்: விவசாயிகளுக்கு ஆட்சியா் எச்சரிக்கை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



