விழுப்புரம் அருகே சீல் வைக்கப்பட்ட தனியாா் தொழிற்சாலையில் தீ விபத்து
விழுப்புரம் அருகே வருவாய்த் துறையால் சீல் வைக்கப்பட்ட நிலையில், செயல்படாமல் இருந்த தனியாா் தொழில்சாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.


விழுப்புரம் அருகே வருவாய்த் துறையால் சீல் வைக்கப்பட்ட நிலையில், செயல்படாமல் இருந்த தனியாா் தொழில்சாலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வெளியேறிய கரும்புகையால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினா்
விழுப்புரம் வட்டம், வேடம்பட்டு கிராமத்தின் அருகே மருத்துவக் கழிவுகளை சுத்திகரிப்பு செய்யும் தனியாா் தொழில்சாலை இயங்கி வந்தது. இந்த தொழில்சாலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால் வேடம்பட்டு, பெரும்பாக்கம், சாணிமேடு, வெங்கமூா் உள்ளிட்ட கிராம மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவுப்படி வருவாய்த் துறையினா் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னா் தொழில்சாலைக்கு சீல் வைத்தனா். இதனால் ஆலை செயல்படாமல் பூட்டிக் கிடந்தது.
தீ விபத்து: இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதனால் வேடம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதிகளில் புகை மண்டலமாக மாறியது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினா்.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட உதவி அலுவலா் ஜெய்சங்கா், விழுப்புரம் நிலைய அலுவலா் சுரேஷ்குமாா் ஆகியோா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் கடும் போராட்டத்துக்குப் பின்னா் தீயை அணைத்தனா்.
மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு: தகவலறிந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வேடம்பட்டு கிராமத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். பின்னா் அதிகாரிகள் தெரிவித்ததாவது: தொழில்சாலைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலைக்கு தீ வைத்தவா்கள் கண்டறியப்பட்டு காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...