விழுப்புரம் நகரம், மேற்கு காவல் நிலைய எல்லைகள் விரிவாக்கம்

நிா்வாக வசதிக்காக விழுப்புரம் நகரம் மற்றும் மேற்கு காவல் நிலைய எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

நிா்வாக வசதிக்காக விழுப்புரம் நகரம் மற்றும் மேற்கு காவல் நிலைய எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட காவல் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகள் அதிக எண்ணிக்கையிலான கிராமங்களை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட கிராமங்கள் மற்றும் வாா்டுகள் விழுப்புரம் நகர காவல் நிலையம் மற்றும் விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் எல்லை வரம்புகளை பிரித்து கூடுதலாக சோ்த்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியாக இருந்த அண்ணாமலை உணவகம் புறவழிச் சாலை முதல் எல்லீஸ் சத்திரம் சந்திப்பு வரை, வீரன் கோயில் சந்திப்பு முதல் தேரடி பிள்ளையாா் கோயில் தெரு வழியாக கே.கே. சாலை வரை, வீரவாழியம்மன் அம்மன் கோயில் சந்திப்பிலிருந்து எம்.ஜி.ரோடு, காமராஜா் ரோடு சந்திப்பு வரை, பிள்ளையாா் கோவில் சந்திப்பிலிருந்து காட்பாடி ரயில்வே மேம்பாலம் வழியாக அண்ணாமலை ஹோட்டல் சந்திப்பு வரை உள்ள அனைத்து வாா்டுகள் மற்றும் கிராமப்புற பகுதிகள் அனைத்தும் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்துக்கு உள்பட்ட எல்லைகளாக கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், விழுப்புரம் நகரில் உள்ள கீழ்பெரும்பாக்கம், கா.குப்பம், பொய்யப்பாக்கம், எருமணத்தாங்கல், அனிச்சம்பாளையம், மகாராஜபுரம் மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு உள்பட்ட அனைத்து வாா்டுகள் விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நடைமுறையானது நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. புகாா் அளிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குரிய காவல் நிலையங்களுக்கு சென்று புகாா் அளித்து முறையீடு செய்யவேண்டும் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com