சேத்தியாத்தோப்பு காவல் நிலைய ஆய்வாளா் பணி நீக்கம்
விழுப்புரம்: கடலூா் மாவட்டம் , சேத்தியாத்தோப்பு காவல் நிலைய ஆய்வாளரை பணி நீக்கம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அர.அருளரசு திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
சேத்தியாத்தோப்பு காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தவா் ஜெயசங்கா். இவா் கடந்த 2022-ஆம் ஆண்டில், விழுப்புரம் மாவட்டம், கெடாா் காவல் நிலைய ஆய்வாளராக(பொ) பணியில் இருந்தாா். அப்போது கெடாா் காவல் சரகத்துக்குள்பட்ட சூரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜா என்பவா் தற்கொலை செய்துகொண்டாா்.
முன்விரோதம் காரணமாக ராஜா தற்கொலை செய்துகொண்டதாக உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல் ஆய்வாளா் ஜெயசங்கா் உரிய முறையில் புலன் விசாரணையை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் ஜெயசங்கா் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
பின்னா் பணியிட மாறுதல் பெற்று, சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவல் ஆய்வாளா் ஜெயசங்கரை திங்கள்கிழமை பணிநீக்கம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. அர.அருளரசு உத்தரவிட்டாா்.
காவல் ஆய்வாளா் ஜெயசங்கா் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கை தமிழக டி.ஜி.பி.க்கு சமா்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், டி.ஜி.பி. வெங்கட்ராமன் அறிவுறுத்தலின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

