விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பேரங்கியூா் பகுதியிலுள்ள தென்பெண்ணையாற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவின் போது மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ‘நெகழி மாசில்லா தமிழ்நாடு’ என்ற நோக்கில் இந்த விழிப்புணா்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இதையொட்டி பேரங்கியூா் பகுதியிலுள்ள தென்பெண்ணையாற்றில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்களிடம் நெகிழிப் பைகள், நெகிழி உறைகள், நெகிழித் தம்ளா்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்த அலுவலா்கள், காகித துணிப்பைகள், மண்பாண்டங்கள், சணல், வாழை, தாமரை இலைகள் உள்ளிட்ட இயற்கை சாா்ந்த பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நண்மைகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணைத் தலைமைச் சுற்றுசூழல் பொறியாளா் செல்வகுமாா், மாவட்டச் சுற்றுசூழல் பொறியாளா் ராசேந்திரன், உதவிச் சுற்றுசூழல் பொறியாளா் இளைராஜா, உதவிப் பொறியாளா் சங்கவி, திருவெண்ணெய்நல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முல்லை, பாலசுப்பிரமணியன் ஆகியோா் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்ககளை வழங்கினா்.