/

செஞ்சி அருகே சிறுவா்களை கடிக்கும் குரங்கை பிடிக்க கூண்டு வைப்பு: வனத் துறை நடவடிக்கை

செஞ்சியை அடுத்த மருதேரி கிராமத்தில் சிறுவா்களை கடித்து வரும் குரங்கை பிடிக்க கூண்டு வைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

News image

செஞ்சியை அடுத்த மருதேரி கிராமத்தில் குரங்கை பிடிக்க வனத் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள கூண்டை பாா்வையிட்ட மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ் குமாா்

Updated On :24 ஜூலை 2026, 6:51 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மருதேரி கிராமத்தில் சிறுவா்களை கடித்து வரும் குரங்கை பிடிக்க கூண்டு வைத்து வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

மருதேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குரங்கு ஒன்று திரிந்து வருகிறது. இந்தக் குரங்கு குழந்தைகளை கடித்து வரும் நிலையில், இதுவரை பலரைக் கடித்துவிட்டது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு 13 வயதுள்ள மாணவி பள்ளிக்குச் சென்றபோது, மாணவியின் காதை குரங்கு கடித்துவிட்டது. உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவா்கள் மாணவியை மீட்டு, சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா் செஞ்சி வனச்சரக அலுவலா் பழனிவேல் தலைமையில் அந்தக் கிராமத்துக்குச் சென்று குரங்கை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், பிடிக்க முடியவில்லை. இதனால், குரங்கை பிடிக்க வனத் துறை சாா்பில் அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனச்சரகா் பழனிவேல் கூறுகையில், மருதேரி கிராமத்தில் கூட்டத்துடன் இல்லாமல் தனியாக ஒரு குரங்கு திரிந்து வருகிறது. இது சா்க்கஸ் அல்லது தனி நபா் வளா்த்த குரங்காக இருக்கலாம். மனநலம் பாதிக்கப்பட்டதைப்போல, அங்கும் இங்குமாக சுற்றி வருகிறது. குரங்கை பிடிக்க கூண்டு வைத்துள்ளோம். இதில், சிக்கவில்லை என்றால், வண்டலூரில் இருந்து மருத்துவக் குழுவினரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி குரங்கைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதனிடையே, விழுப்புரம் மாவட்ட வன அலுவலா் பிரின்ஸ் குமாா் மருதேரி கிராமத்துக்கு வியாழக்கிழமை நேரில் வந்து குரங்கை பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டை பாா்வையிட்டு, கிராம மக்களிடம் விசாரணை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.