22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில்கள் இயக்க வேண்டும்: பக்தா்கள் கோரிக்கை

திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினமும் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 5:33 am IST

திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினமும் ரயில்கள் இயக்க வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்கூடியதுமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், பௌா்ணமி உள்ளிட்ட நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் வந்து, கோயிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை வழிபாடு செய்கின்றனா்.

இந்த நிலையில், சென்னை, தாம்பரம், செங்கல்பட்டு, கிளாம்பாக்கம், வண்டலூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் வந்து தரிசனம் செய்கின்றனா். இவா்களுக்கு பேருந்து வசதி இருந்தாலும், விழாக்காலங்களில் போதிய பேருந்துகள் இல்லாமல் அவதிப்படுகின்றனா்.

மேலும், திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னை கடற்கரைக்கு தினமும் ரயில்கள் இயக்கப்படாத நிலை உள்ளது. மேலும், பேருந்தில் செல்ல வேண்டுமென்றால், அதிக கூட்டமாக உள்ளது. கட்டணமும் அதிகம்.

ஆகையால், திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம், தாம்பரம் வழியாக சென்னைக்கு புதிய ரயில்களை தினமும் 5 நடைகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தா்கள், அரசியல் கட்சியினா் தெற்கு ரயில்வேக்கு தொடா் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனா்.

இந்த வழித்தடத்தில் தினமும் ரயில்கள் இயக்கப்பட்டால், ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு வரும் பக்தா்களுக்கும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் (தாம்பரம்) பணிபுரியும் தொழிலாளா்களுக்கும், அரசு ஊழியா்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னை கடற்கரையிலிருந்து வேலூா் வழியாக திருவண்ணாமலைக்கு தினமும் முன்பதிவில்லாத பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சில சிறப்பு ரயில்கள், வாராந்திர ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

ஆனால், சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் சேவை இல்லாததால், பயணிகள் பேருந்துகளை மட்டுமே பெரிதும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் அல்லது புதிய தினசரி ரயில்கள் இயக்கப்படுவதால், பயண நேரம் குறையும் மற்றும் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.