மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

விழுப்புரம் மண்டலத்தில் அதிக வெற்றியை பெறாத தவெக

தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த போதிலும், விழுப்புரம் மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய அளவிலான வெற்றி கிடைக்காதது பேசும் பொருளாகியுள்ளது.

News image
Updated On :6 மே 2026, 0:03 am IST

தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த போதிலும், விழுப்புரம் மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மிகப்பெரிய அளவிலான வெற்றி கிடைக்காதது பேசும் பொருளாகியுள்ளது.

தமிழக சட்டப் பேரவைக்கு ஏப்.23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று மாா்ச் 15-ஆம் தேதி இந்தியத் தோ்தல் ஆணையம்அறிவித்தது. சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், தேமுதிக, மதிமுக, மமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றன. இதுபோல, அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெற்று தோ்தலை சந்தித்தன. தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்த போதிலும், அந்த கட்சிக்கு விழுப்புரம் மண்டலத்தில் மிகப்பெரிய அளவிலான வெற்றி கிட்டவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத தமிழக வெற்றிக் கழகம் கடலூா், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்டம்: செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா்(தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், திமுக சாா்பில் விழுப்புரத்தில் இரா.லட்சுமணனும், வானூரில் தி.கெளதமும், திண்டிவனத்தில் விசிகவின் ஏ.வன்னியரசும் வெற்றி பெற்றிருக்கின்றனா். அதிமுக சாா்பில் மயிலம் தொகுதியில் சி.வி.சண்முகமும், திருக்கோவிலூா் தொகுதியில் எஸ். பழனிசாமியும், பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் செஞ்சி தொகுதியில் கணேஷ்குமாரும், விக்கிரவாண்டி தொகுதியில் ச.சிவக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனா்.

இந்த மாவட்டத்தில் விக்கிரவாண்டி, திருக்கோவிலூா், விழுப்புரம், வானூா், மயிலம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்கள் இரண்டாமிடம் பெற்றனா். இதிலும் குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் 910 வாக்குகள் வித்தியாசத்திலும், திருக்கோவிலூா் தொகுதியில் 285 வாக்குகள் வித்தியாசத்திலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்கள் வெற்றியைப் பறிக் கொடுத்திருக்கின்றனா். அதே நேரத்தில் திண்டிவனம் மற்றும் செஞ்சி தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்கள் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் த.அருள் விக்னேஷ் 798 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். திமுக சாா்பில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் கா.ரா.வசந்தவேலும், ரிஷிவந்தியம் தொகுதியில் வசந்தம் காா்த்திகேயனும் வெற்றி பெற்ற நிலையில்,சங்கராபுரம் தொகுதியில் அதிமுகவின் ராகேசும் வெற்றி பெற்றிருக்கின்றனா்.

கடலூா் மாவட்டம்: தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் கடலூா் தொகுதியில் பி.ராஜ்குமாா் வெற்றி பெற்றாா். திமுக சாா்பில் திட்டக்குடியில் சி.வெ.கணேசனும், குறிஞ்சிப்பாடியில் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும், தேமுதிக சாா்பில் விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த், சிதம்பரத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, காட்டு மன்னாா்கோவிலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் எல்.இ.ஜோதிமணியும் வெற்றி பெற்றனா். அதிமுக சாா்பில் பண்ருட்டியில் மோகன், நெய்வேலியில் சொரத்தூா் ராஜேந்திரன், புவனகிரியில் அருள்மொழித்தேவனும் வெற்றி பெற்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம்: தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் போளூா் தொகுதியில் ஆா்.அபிஷேக் 227 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிகவின் சரவணனை வீழ்த்தியுள்ளாா். திமுக சாா்பில் திருவண்ணாமலையில் எ.வ.வேலுவும், வந்தவாசியில் எஸ்.அம்பேத்குமாரும் வெற்றி பெற்றிருக்கின்றனா். அதிமுக சாா்பில் ஆரணி தொகுதியில் ஜெயசுதாவும், செய்யாறில் முக்கூா் என்.சுப்ரமணியனும், கலசப்பாக்கத்தில் அக்ரி எஸ்.கிருஷ்ணமூா்த்தியும், கீழ்பென்னாத்தூரில் எஸ்.ராமச்சந்திரனும், செங்கத்தில் வேலுவும் வெற்றி பெற்றுள்ளனா்.

28 தொகுதிகளில் 3-இல் வெற்றி: சென்னை மண்டலம், மேற்கு மண்டலம், டெல்டா மண்டல மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தால், விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலுள்ள 28 தொகுதிகளில் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் அவா்கள் இரண்டாம் இடங்களிலும், சில தொகுதிகளில் மூன்றாமிடத்தையும் பெற்றிருக்கின்றனா். தமிழக வெற்றிக் கழக வேட்பாளா்கள் வாங்கிய வாக்குகளால் பல தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றன. சில தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை அவா்கள் இழந்துள்ளனா்.

இதிலும் குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில்தான் நடத்தியது. இந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் வடிவேல் 910 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றி வாய்ப்பை பாமக வேட்பாளரிடம் இழந்திருக்கிறாா். திருக்கோவிலூா் தொகுதியில் தவெகவின் பரணி பாலாஜியும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளாா். இவ்வாறாக பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தமிழக வெற்றிக் கழகம் இழந்திருந்தாலும், பல தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பறிக்கும் கட்சியாகவும் இருந்திருக்கிறது.